Home Featured நாடு “மீண்டும் தேர்தலில் போட்டியில்லை” – முடிவுக்கு வரும் துங்கு ரசாலியின் சகாப்தம்!

“மீண்டும் தேர்தலில் போட்டியில்லை” – முடிவுக்கு வரும் துங்கு ரசாலியின் சகாப்தம்!

833
0
SHARE
Ad

Tengku-Razaleighகோலாலம்பூர்- நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, தாம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

78 வயதான அவர், குவா மூசாங் தொகுதியிலிருந்து 9 முறை தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திற்கு தேர்வானவர். இந்நிலையில் தமது முடிவு குறித்து அம்னோ தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான பிரதமர் நஜிப்பிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையே தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.

“நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே எனது கடைசி தவணையாகும். அரசியலிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை. எனினும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இது குறித்து பிரதமரிடம் தெரிவித்துவிட்டேன். எல்லோரும் என் முடிவைப் புரிந்துகொள்வர் என நம்புகிறேன்” என்று ரசாலி  தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அண்மைக் காலமாக அரசியல் அரங்கில் ரசாலியின் பெயர் பரபரப்புடன் அடிபட்டு வருகிறது. பிரதமர் நஜிப்பை கவிழ்க்க அம்னோ தலைவர்கள் சிலர் முயற்சிப்பதாக கூறப்பட்ட நிலையில், அம்னோ உதவித் தலைவரான சாஹிட் ஹாமிடி இத்தகைய முயற்சியின் பின்னே மூத்த அம்னோ உறுப்பினர் ஒருவர் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

அந்த மூத்த உறுப்பினர் அதிகார ஆசையுடன் இருப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார். எனினும் அந்த மூத்த உறுப்பினர் யார் என அவர் கூறவில்லை.

முன்னதாக கடந்த மே மாதம் முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம், “ரசாலி மக்களின் பிரதமர். நஜிப் பதவி விலகிய பின்னர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டால் அதற்கு தலைமையேற்க ரசாலிதான் பொருத்தமானவர்” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரசாலி, “சிலர் நாட்டின் முதல் நிலைப் பதவியை நான் வகிக்க வேண்டும் என்று கூறி வந்தாலும், எனக்கும் பிரதமருக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் பிரதமரை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தேன். வதந்திகளுக்கு முடிவே இல்லை” என்றார்.

மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்த துங்கு ரசாலி, பிரதமர் நஜிப்பின் தந்தையான துன் அப்துல் ரசாக்கிற்கு முதன்மை ஆலோசகராக செயல்பட்டவர். பேங்க் பூமிபுத்ரா வங்கியின் தலைவராக  இருந்த அவர், பெட்ரோனாஸ் உருவாக்கத்திற்கும் மூலகாரணமாக இருந்து அதன் தலைவராகவும் ஆரம்ப காலங்களில் இருந்தவர் துங்கு ரசாலி.