லாகூர் – பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைத் தவிர, பிற கட்சிகளை ஒன்றிணைத்துப் புதிய கட்சி துவங்கப் போவதாகப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கியூ பிரிவுத் தலைவர் ஷூஜாத் ஹூசைன் கூறியுள்ளார்.
அப்புதிய கட்சிக்கு ‘ஐக்கிய முஸ்லீம் லீக்’ எனப் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்குள் புதிய கட்சி தொடங்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2001-ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகள் பாகிஸ்தானின் அதிபராக இருந்த முஷாரஃப், தேசத் துரோகக் குற்றம், முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ படுகொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் சிக்கி நாடு கடத்தப்பட்டார்.
அதன்பின்பு பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கை ஓங்கியது. ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாகிஸ்தான் அரசியலில் வலுவாகக் காலூண்ட முஷாரஃப் முயற்சிக்கிறார்.
அதன் விளைவாக நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக உள்ள கட்சிகளை எல்லாம் ஒன்றிணைக்கிறார்.
பாகிஸ்தான் அரசியலில் வலுவான நிலையில் உள்ள நவாஸ் ஷெரீஃப், இம்ரான் கான் ஆகியோரை எதிர்கொள்ளும் விதத்தில் செல்வாக்குள்ள ஒரே நபர் முஷாரஃப் தான் என்பதால் எதிர்க்கட்சியினர் அனைவரும் முஷாரஃப் தலைமையில் ஒன்றிணைந்து தேர்தல் களம் காண உள்ளனர்.