புதுடில்லி – டில்லியிலுள்ள ஒளரங்கசீப் சாலையின் பெயரை மாற்றி அதற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று இரு தினங்களுக்கு முன்பு டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பிற்கு முஸ்லீம் மதத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய முஸ்லிம்கள் நலக் கட்சித் தலைவரும், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினருமான இலியாஸ் தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளார்.
“டெல்லி அவுரங்கசீப் சாலையை அப்துல்கலாம் சாலை என்று பெயர் மாற்றியது திட்டமிட்ட செயல்.
இதோடு இது நின்று விட்டால் பரவாயில்லை; ஆனால், நிற்காது.
அடுத்து, மராட்டிய மாநிலத்தில் ஒளரங்கசீப் நினைவிடம் அமைந்துள்ள ஒளரங்காபாத் மாவட்டத்தின் பெயரை மாற்றுவோம் என்று சிவசேனா கூற ஆரம்பித்துள்ளது.
வரலாற்றில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் பேரரசர்களின் பெயர்களைத்தான் சாலைகளுக்கும் நகரங்களுக்கும் வைத்துள்ளனர்.
ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒளரங்கசீப் இந்துக்களுக்கு எதிரானவர் அல்லர்; அவர் பல இந்துக் கோவில்களுக்கும் பிற மதம் சார்ந்த கட்டிடங்கள் கட்டுவதற்கும் நிலம் வழங்கியவர்; மதச்சார்பற்றவர்.
அப்படிப்பட்ட அவருடைய பெயரை மாற்றி அப்துல் கலாம் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?
அப்துல் கலாம் அவர்களும் மதச்சார்பற்றவர் தான். எனினும், இத்தனை ஆண்டுகளாக இருந்த சரித்திர நாயகனின் பெயரை மாற்றக் கூடாது என்பதே எங்கள் கருத்து!” என அவர் முஸ்லிம் மதத்தினர் சார்பில் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.