புதுடில்லி – மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி சர்வதேச இந்தி மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
‘இந்தி உலகம்: விரிவாக்கமும் நோக்கமும்’ என்னும் பொருளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், மத்தியப் பிரதேச அரசும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்தி மொழியின் புகழை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் உலக இந்தி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 9-ஆவது மாநாடு கடந்த 2012-ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன் ஸ்பர்க் நகரில் நடந்தது.
அடுத்ததாக 10-ஆவது மாநாடு இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.
இம்மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 250-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் போது இந்தி மொழி பற்றிய 28 கருத்தரங்கங்கள் நடக்கின்றன.
மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தி மொழி தொடர்பான கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் ‘கூகுள்’, ‘ஆப்பிள்’ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
நிறைவு நாளன்று ‘தூய இந்தியில் பேசுவோம்’ என்ற தலைப்பில் அமிதாப்பச்சன் உரையாற்றுகிறார்.