கொழும்பு – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் முக்கியத் தளபதியாக விளங்கிய கருணா, பின்பு பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புலிகள் இயக்கத்தை விட்டு விலகி, ராஜபக்சேவுடன் சேர்ந்து அமைச்சர் பதவியும் பெற்றார்.
அவர் சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தின் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பிரபாகரன் ராணுவத் தாக்குதலால் இறக்கவில்லை; தனது கைத் துப்பாக்கியால் சுட்டுத் தானே தற்கொலை செய்து கொண்டார்” எனக் கூறியிருந்தார்.
அதை இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா மறுத்துள்ளார். இவர் தான் 2009 இலங்கைப் போரின் போது, ராஜபக்சே அரசின் ராணுவத் தளபதியாக இருந்து போரை வழி நடத்தியவர்.
கருணாவின் கூற்றை மறுத்துப் பொன்சேகா கூறியிருப்பதாவது:
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஏனெனில் அவரின் தலையில் இருக்கும் காயம் பெரிதாகவும் மண்டையோட்டின் ஒரு பகுதி வெளித்தள்ளியும் இருந்தது.
துப்பாக்கியால் அவர் தன்னைத் தானே சுட்டிருந்தால் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டிருக்காது. மேலும் துப்பாக்கிக் குண்டு துளைத்த அடையாளம் இருந்திருக்கும்.
ஆகவே, அவரது தலையில் மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல்தான் தாக்கியிருக்கலாம்” என்றார்.
மேலும் அவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் ஆகியோருக்கு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்றும், அவர்கள் தொடர்பாகத் தனக்குத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.