Home கலை உலகம் எங்கள் அணியில் எஸ்.ஜே.சூர்யா போட்டி என்கிறார் ராதாரவி; மறுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா!

எங்கள் அணியில் எஸ்.ஜே.சூர்யா போட்டி என்கிறார் ராதாரவி; மறுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா!

668
0
SHARE
Ad

sj-surya1கோயம்புத்தூர் – கோவை சினிமா நடனம், நாடக, நடிகர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கோவையில் தொடங்கி வைத்தார்.

இப்புதிய சங்கம், நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பின் தென்னிந்திய நடிகர் சங்கத்தோடு இணைக்கப்படும் எனத் தெரிகிறது.

இவ்விழாவில் பேசிய ராதாரவி, “தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எப்போது தேர்தல் என்பது தெரியவில்லை. அதை நீதிமன்றம் தான் அறிவிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குச் சரத்குமாரும், பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறோம். எங்கள் அணி சார்பில் நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். மற்ற நிர்வாகிகள் பதவிக்கு யார்? யார்? போட்டியிடுவது என்பது பின்னர் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு சிம்பு, “எப்போதும் என்னுடைய ஆதரவு சரத்குமார் சாருக்குத் தான்” என்று சொல்லியிருந்தார். எஸ்.ஜே.சூர்யா இதுவரை வாய் திறந்து இது சம்பந்தமாக எதுவும் பேசியதில்லை.

ஆனால், நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணியின் சார்பாக நடிகர் சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் போட்டியிடுகிறார்கள் என்று ராதாரவி சொன்னதும், பதறியடித்து மறுப்புத் தெரிவித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

“நான் இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியனவற்றில் உறுப்பினராக இருக்கிறேன். எல்லாச் சங்கங்களிலும் நான் உறுப்பினராக மட்டுமே இருக்க விரும்புகிறேன். எந்தச் சங்கத்திலும் எந்தப் பொறுப்புக்கும் வர நான் விரும்பியதில்லை.

நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணியை ஆதரித்து ஓட்டுப் போட வேண்டும் என்று சரத்குமார் அணியினர் கேட்டார்கள்; நானும் ‘சரி போடுகிறேன்’ என்று சொன்னேன்.அவ்வளவுதான். தேர்தலில் போட்டியிடுவதாக நான் சொல்லவில்லை” எனத் தெளிவு படுத்தியுள்ளார்.

ஆனால், சிம்பு இது குறித்து எதுவும் கருத்துச் சொல்லவில்லை. ஆக, மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி. சரத்குமார் அணி சார்பில் சிம்பு போட்டியிடுவது உறுதி!