சிட்னி – ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் ‘ஸ்பெல்லீங் பீ’ நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வயது இரட்டைக் குழந்தைகள் அட்டகாசப்படுத்துகின்றனர்.
நீண்ட ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளைச் சரியாக சொல்வது தான் ‘ஸ்பெல்லீங் பீ’ போட்டியாகும்.
இதில் உலகம் முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட 3000 குழந்தைகளில் 12 பேர் மட்டும் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த 12 பேரில் தமிழகத்தின் வேலுரைப் பூர்வீகமாகக் கொண்ட இரட்டைக் குழந்தைகளான ஹார்பிதா மற்றும் ஹார்பித்தாவும் அடக்கம்.
போட்டியில் கடகடவென்று பதில் சொல்லி, பார்வையாளர்களை மட்டுமல்லாது நடுவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.இருவரும் 50,000 வார்த்தைகளுக்கும் மேல் தெரிந்து வைத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் எந்தவிதச் சிறப்புப் பயிற்சிக்கும் செல்லவில்லையாம்.நான்கு வயதில் இருந்தே வீட்டில் அப்பாவின் ஐ பேடில் ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் விளையாட்டை விளையாட்டாக விளையாடுவார்களாம். அந்த விளையாட்டுதான் இப்போது அவர்கள் போட்டியில் அசத்துவதற்கு உதவியிருக்கிறது.
சுதந்திரமாகக் கற்றுக் கொள்ள அவர்களை அனுமதித்ததே இத்தகைய புத்திசாலித்தனத்திற்குக் காரணம் என அவர்களுடைய அப்பா அண்ணாமலை கூறியுள்ளார்.