சென்னை- கடந்த சில நாட்களாகத் தமிழகச் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கும் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் முதலிய கட்சிகளுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் பிரதான எதிர்க் கட்சியான தேமுதிக உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
சென்ற கூட்டத் தொடரின் போது, தேமுதிக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் இந்தக் கூட்டத் தொடரிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. ஆகையால், எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் சட்டப் பேரவைக்கு வருவதைத் தவிர்த்து வந்தார்.
விஜயகாந்தும் தேமுதிக உறுப்பினர்களும் இருந்திருந்தால் சட்டசபைக் கூட்டம் இன்னும் ரகளையாக இருந்திருக்கும்.
இந்நிலையில், நேற்று சட்டசபைக்கு வந்த விஜயகாந்த், பேரவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல், பேரவை வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த உறுப்பினர் பதிவேட்டில் மட்டும் கையெழுத்துப் போட்டு விட்டு உடனடியாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் சட்டசபையில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்வார்கள் என வழக்குத் தொடர்ந்திருக்கிறார் விஜயகாந்த்.
அதற்குச் சாதகமான முடிவு வந்தாலொழிய அவர் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்கிற முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.