Home Featured நாடு அரசியல் பார்வை: சங்கப் பதிவகமா? கூட்டரசு நீதிமன்றமா? ஊசலாடும் பழனிவேல் தரப்பு!

அரசியல் பார்வை: சங்கப் பதிவகமா? கூட்டரசு நீதிமன்றமா? ஊசலாடும் பழனிவேல் தரப்பு!

555
0
SHARE
Ad

palanivel-subramaniam-MICகோலாலம்பூர்- (சங்கப் பதிவக அலுவலகத்தில் ஆட்சேபங்கள் – கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணைக்காக காத்திருப்பு – இந்நிலையில், சட்டப் போராட்டத்தில் பழனிவேல் தரப்பு மீண்டும் வெற்றி பெற முடியுமா? கட்சிக்குத் திரும்ப முடியுமா? – செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்)

மஇகா தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் போராட்டத்தில் தோல்வி கண்டு விட்ட டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தரப்பினர், தற்போது தங்களின் அரசியல் – சட்டப் போராட்டத்தில் ஏறத்தாழ இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளனர் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சங்கப் பதிவகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி, புகார்கள் சமர்ப்பித்து, தங்களுக்கு சாதகமான பதிலைப் பெற முனைவது அவர்களின் போராட்டத்தின் ஒரு கோணத்திலான இலக்காக பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மற்றொரு கோணத்தில் சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை சென்று தோல்வி கண்டு விட்ட பழனிவேல் தரப்பினர் தற்போது ஆகக் கடைசி சட்ட முயற்சியாக கூட்டரசு உச்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் விசாரணைத் தேதி நிர்ணயத்திற்காக காத்திருக்கின்றனர்.

முதல் கோண இலக்கு – சங்கப் பதிவகம்

தங்களின் முதல் கோண இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக கடந்த வியாழக்கிழமை (3 செப்டம்பர் 2015) பழனிவேல் தரப்பின் முக்கியப் பொறுப்பாளர்கள் சங்கப் பதிவகத்தின் முன் திரண்டு தங்களின் ஆட்சேபங்களைத் தெரிவித்துள்ளனர்.

Mohamed -Razin - Abdullah - DG - RoSதங்களின் தரப்புதான் மஇகாவின் உண்மையான, சட்டபூர்வமான தலைமைத்துவம் என்பதை நிரூபிக்கும் போராட்டத்தின் ஒரு முயற்சியாக, தாங்கள் சமர்ப்பித்திருக்கும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும் என அவர்கள் சங்கப் பதிவக அலுவலகத்தில், அவர்கள் ஆட்சேபக் குரல் எழுப்பியிருக்கின்றனர்.

ஆனால், சங்கப் பதிவகமோ, தங்கள் மீது சார்வு செய்யப்பட்டிருக்கும் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருப்பதால், இனி எந்தவித கடிதங்களையும் வழங்கமாட்டோம் என ஏற்கனவே, கூறிவிட்டது.

கடந்த வியாழக்கிழமையன்று பழனிவேல் தரப்பினரை சந்திப்பதைத் தவிர்த்த சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ரசின் அப்துல்லா “சங்கப் பதிவகத்தை பழனிவேல் தரப்பு மீண்டும் அணுகும் விஷயம் தமக்குத் தெரியும் என்றாலும், வேறு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்ததால் அவர்களைச் சந்திக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“சங்கப் பதிவக அலுவலகத்திற்கு அவர்கள் வருவது தெரியும். ஆனால் எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒருவேளை மனு அல்லது ஏதேனும் கடிதத்தை அளிக்கக்கூடும். அவ்வாறு ஏதும் அளிக்கப்பட்டால் அதை பெற்றுக் கொள்வோம். சட்டத்துக்குட்பட்டு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்றும் முகமட் ரசின் கூறியிருந்தார்.

CWC 2009 RoS list

சங்கப் பதிவகத்தின் 25 ஜூன் 2015 தேதியிட்ட மஇகா பொறுப்பாளர்கள் பட்டியல் அடங்கிய அதிகாரபூர்வக் கடித நகல்

மஇகாவின் தேசியத் தலைவர் யார் என்று சங்கப் பதிவகத் தலைமை இயக்குநரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த ஜூன் 25ஆம் தேதி மஇகாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இதுகுறித்த தெளிவான விடை இருப்பதாகவும் முகமட் ரசின் கூறியிருக்கின்றார்.

“அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம். அந்தக் கடிதத்தில் மஇகா நிர்வாகிகளின் பெயர்களை சங்கப் பதிவகம் பட்டியலிட்டுள்ளது. மேலும் கட்சித் தலைவர் யாரென்பதையும் அதில் புலப்படுத்தி உள்ளோம்,” என்று முகமட் ரசின் மேலும் தெரிவித்தார்.

மஇகாவுக்கு சங்கப் பதிவகம் அனுப்பிய அந்தக் கடிதத்தில் கட்சியின் இடைக்கால தேசியத் தலைவர் என டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் பெயரே குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் சங்கப் பதிவக உத்தரவின்படி முறையாக தேர்தல் நடத்தப்பட்டு, டாக்டர் சுப்ரமணியம் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சங்கப் பதிவகம் கூட்டரசு நீதிமன்ற முடிவுக்காக இனி காத்திருக்கும்

MIC-logoஎனவே, இனி சங்கப் பதிவகம், பழனிவேல் தரப்பினர் வழங்கும் கடிதங்களுக்கும், மனுக்களுக்கும் “பெற்றுக் கொண்டோம்” என்றுதான் பதில் கொடுப்பார்களே தவிர, கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு தெரியும்வரை வேறு எந்தவித பதிலையும் வழங்கமாட்டார்கள் என இந்த விவகாரங்களைக் கண்காணித்து வரும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காரணம், கூட்டரசு நீதிமன்ற வழக்கில் சங்கப் பதிவகம்தான் பிரதிவாதி என்பதால், வழக்கு முடிவடையும்வரை, அவர்கள் எந்தவித பதிலையும் வழங்க மாட்டார்கள் என்பதோடு, அப்படியே வழங்குவதாக இருந்தாலும், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் (Attorney General Office) முன் அனுமதியின்றி எந்தக் கடிதத்தையும் அவர்கள் தர மாட்டார்கள்.

ஆனால், பழனிவேல் தரப்பினர் எதிர்பார்க்கும் அத்தகைய கடிதம் ஒன்றை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து வழங்குவார்களா?

சந்தேகம்தான்!

அடுத்து கூட்டரசு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டின் நிலைமை என்னவென்று பார்ப்போமா?

கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு

கூட்டரசு நீதிமன்றத்தின் விசாரணக்காகக் காத்திருக்கும் பழனிவேல் தரப்பினரின் மேல்முறையீடு, அப்படியே வெற்றியடைய வேண்டுமானால், இரண்டு தடைக் கற்களைத் தாண்டி வரவேண்டும்.

முதல்கட்ட விசாரணையில், இந்த வழக்கு முழு மேல் முறையீட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய  வழக்குதானா? கூட்டரசு நீதிமன்றத்தின்  சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தகுதிகளைக் கொண்ட வழக்குதானா? என்பதை முதலில் நிர்ணயம் செய்து கூட்டரசு நீதிமன்றம், முன் அனுமதி வழங்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் இரண்டாவது கட்டமாக, வழக்கின் முழு விசாரணையும் நடைபெறும்.

Malaysia Courts

இந்த முடிவைச் செய்வதற்கு இரண்டு நிர்ணயத் தகுதிகளை கூட்டரசு நீதிமன்றம் எப்போதும் பின்பற்றும்.

முதலாவது, இந்த வழக்கு சமுதாயத்தின் மேல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய (Public interest) அம்சங்களைக் கொண்டிருக்கின்றதா? என்ற கேள்வியில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் திருப்தியடைய வேண்டும்.

இரண்டாவது நிர்ணயத் தகுதி, இந்த வழக்கின் சட்ட அம்சங்களில் குழப்பங்கள் ஏதும் இருக்கின்றதா? இதுவரை கீழ்நிலை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளின் சட்ட முரண்பாடுகள் இருக்கின்றனவா – அதன் காரணமாக, கூட்டரசு நீதிமன்றம் தலையிட்டு ஒரு முடிவைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கின்றதா – என்பதை நீதிபதிகள் முடிவு செய்வார்கள்.

Palanivelமுதலாவது கேள்விக்கு, பழனிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் சாதகமான பதிலை, நீதிபதிகளின் திருப்திக்கு ஏற்ப வழங்க முடியும். காரணம், இந்த வழக்கின் முடிவு, ஏறத்தாழ 6 இலட்சம் மஇகா உறுப்பினர்களை பாதிக்கக் கூடிய வழக்கு – 68 ஆண்டுகால பாரம்பரியமிக்க கட்சியின் தலைமைத்துவத்தை நிர்ணயிக்கும் வழக்கு – என்ற அடிப்படையில் கூட்டரசு நீதிமன்றம் முதல் கட்ட நிர்ணயத் தகுதி அனுமதியை வழங்கக் கூடும்.

ஆனால், இரண்டாவது நிர்ணயத் தகுதியில் பழனிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம், உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்த ஒரு வழக்கை – மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் (Court of Appeal)  அனுபவம் வாய்ந்த மூன்று நீதிபதிகள் ஒரே மனதோடு தள்ளுபடி செய்த ஒரு வழக்கை – மீண்டும் கூட்டரசு நீதிமன்றமும் விசாரிப்பதற்கு போதுமான சட்டக் காரணங்கள், சட்டக் குழப்பங்கள், இருக்கின்றனவா என்பதை நீதிபதிகளுக்கு எடுத்துக் காட்டுவதில் பழனிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் பெரும் சிரமத்தையே எதிர்நோக்குவார்கள்.

ஆக, முதலில் இந்த இரண்டு நிர்ணயத் தகுதிகளின் அடிப்படையில் கூட்டரசு நீதிமன்றத்தின் முன் அனுமதியை பழனிவேல் தரப்பு பெற வேண்டும். அவ்வாறு பெற முடியாவிட்டால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அதன் பின்னர் மேற்கொண்டு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை எதுவும் நடைபெறாது.

ஆனால், நீதிமன்றத்தின் முன் அனுமதியை வெற்றிகரமாகப் பெற்றுவிட்டால், அதன் பின்னர் நடைபெறவிருக்கும் முழு மேல்முறையீட்டு விசாரணையில் அவர்கள் வெற்றி பெறவேண்டும்.

வழக்கில் வெற்றி பெற்றாலும், பழனிவேல் கட்சிக்குத் திரும்ப முடியுமா?

Subra-press reporters-Optometrics Confசரி! இவ்வளவு சட்டத் தடைகளையும் தாண்டி பழனிவேல் தரப்பினர் கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றி பெறுகின்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

அந்த நீதிமன்ற வெற்றியின் மூலம் பழனிவேல் மீண்டும் மஇகா தேசியத் தலைவர் ஆக முடியுமா – அல்லது குறைந்த பட்சம் உறுப்பினராக கட்சிக்குத் திரும்ப முடியுமா என்றால் அதுவும் சந்தேகம்தான்!

காரணம், தற்போது டாக்டர் சுப்ரமணியம் அதிகாரபூர்வமாக மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

இதனால், பழனிவேல் தரப்பு, அப்படியே கூட்டரசு நீதிமன்றத்தில் வெற்றி பெற்றாலும், டாக்டர் சுப்ரமணியம் தேசியத் தலைவராக பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்றும், கட்சியில் நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களும் செல்லாது என்றும் மற்றொரு நீதிமன்ற உத்தரவையும் அவர்கள் பெற்றாக வேண்டும்.

தாங்கள் இன்னும் மஇகா உறுப்பினர்கள்தான் என்றும், மஇகா அமைப்பு விதி 91-வது பிரிவின் கீழ் தாங்கள் உறுப்பியம் இழந்ததாக மஇகா மத்திய செயலவை செய்த முடிவு சட்டரீதியாக செல்லாது என்ற ஒரு தீர்ப்பையும் அவர்கள் பெற்றாக வேண்டும்.

ஆனால், கூட்டரசு நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வழக்கில் இந்த அம்சங்கள் முன் நிறுத்தப்படவில்லை எனத் தெரிகின்றது. இதனால், இத்தகைய உத்தரவுகள் எதையும் கூட்டரசு நீதிமன்றம் பிறப்பிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

அதாவது, மேல்முறையீட்டு வழக்கில் பழனிவேல் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டாலும், கூட்டரசு நீதிமன்றம், டாக்டர் சுப்ரா தேசியத் தலைவர் இல்லை என்றோ, மஇகா உறுப்பியத்தை இழந்து விட்ட பழனிவேல் மற்றும் நால்வரும் இனி மஇகா உறுப்பினர்கள் என்றோ எந்தவித தீர்ப்பையும், உத்தரவையும் வழங்காது. அது தனி விவகாரமாகவே கருதப்படும்.

இந்நிலையில், சங்கப் பதிவகம் மூலமாகவோ, கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு மூலமாகவோ, பழனிவேலுவும் அவரது தரப்பினரும், மீண்டும் மஇகா உறுப்பினர்களாகக் கட்சிக்குத் திரும்புவதோ – அல்லது

– பழனிவேல் மஇகா தலைவராக மீண்டும் வருவார் என்பதோ –

சட்ட ரீதியாக நடக்க முடியாத ஒன்று என்றே சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

-இரா.முத்தரசன்