வாஷிங்டன் – அமெரிக்காவின் ‘மனிதநேய விருது’ அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணான ஜும்பா லாஹிரிக்கு (வயது 48) வழங்கப்படுகிறது.
இவ்விருதினை வரும் 10-ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா வழங்குகிறார்.
பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் கற்பனை சார்ந்த எழுத்துத்துறையின் பேராசிரியராக பணியாற்றும் ஜும்பா லாஹிரி எழுத்துத் துறையின் மிக உயரிய விருதான ‘புலிட்ஸர் பரிசு’ பெற்றவர் ஆவார். மேலும், இவரது ’தி லோலேண்ட்’ என்னும் நூல் ‘மான் புக்கர்’ பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இப்படிப் பல உயரிய விருதுகளைப் பெற்று வரும் இவர், அமெரிக்க அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய மனிதநேய விருதிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனது கற்பனை சார்ந்த கதைகளின் மூலம் இந்திய-அமெரிக்க காலாச்சாரச் செறிவை அழகுபட விவரித்தமைக்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதாகத் தேர்வுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.