புதுடில்லி – ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடி வருகின்றார்.அவ்வகையில் தமிழ்நாடு திருநெல்வேலியைச் சேர்ந்த 15 வயது மாணவி விசாலினியுடன் கலந்துரையாடினார்.
ஆசிரியர் தினத்தையொட்டி இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில், நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விசாலினியும் ஒருவர்.
இவர் சிறுவயதிலேயே கணினித் துறையில் பல்வேறு கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, 15 வயதிலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் பிடெக் முதலாம் ஆண்டில் பயில அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாலினி முதலில் பிரதமருக்குத் தமிழில் ‘வணக்கம்; என்று சொல்லி பேச்சை ஆரம்பித்தார். உடனடியாகப் பிரதமர் மோடியும் வணக்கம் என்று பதிலுக்குத் தமிழிலேயே சொன்னார்.
“நான் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த வகையில் சேவை செய்ய வேண்டும்? நீங்கள் வழிகாட்ட முடியுமா?” எனக் கேட்டார்.
அதற்குப் பிரதமர் மோடி, “ராணுவத்தில் சேர்ந்தோ, அல்லது அரசியலுக்கு வந்தோதான் நாட்டிற்குச் சேவையாற்ற வேண்டும் என்பது இல்லை. சிறு சிறு பங்களிப்பு மூலம் நாட்டிற்குப் பெரிய சேவை ஆற்ற முடியும்.
உதாரணமாக மின்சார சிக்கனம், பெட்ரோல் சிக்கனம், உணவு சேமிப்பு போன்றவற்றின் மூலமும் நாட்டிற்குச் சேவை புரிய முடியும்” எனப் பதிலளித்தார்.
இறுதியில் மாணவி அவருக்கு நன்றி தெரிவித்தார்.