புதுடில்லி- சன்குழும சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, முன் கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தயாநிதி மாறன் மத்தியத் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, நிர்பந்தத்தின் பேரில் ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்து, அதன் மூலம் மேக்சிஸ் நிறுவனத்தைச் சன் குழுமத்தில் ரூ.629 கோடி முதலீடு செய்த வைத்து ஆதாயம் தேடியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது.
இவ்வழக்கில் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கப் பிரிவு அறிவித்தது.
ஆனால் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததோடு, இந்த வழக்கு 2ஜியுடன் தொடர்புடையதா? என வரும் 8-ஆம் தேதி விசாரிக்க முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன் ஆஜராகிய அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருவதால், அதற்கு முன் இந்த விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் 7-ஆம் தேதியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
எனவே, இம்மாதம் 7-ஆம் தேதி திங்கட்கிழமையன்று இவ்வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.