சென்னை- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சாதிக் கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைக்காது என்றும், திமுக இம்முறை 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் பேட்டியளித்தமைக்காக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் (படம்) பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்சித் தலைமைக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் தாம் தவறிழைத்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
“பல நேரங்களில் வார்த்தைகளிலும் கட்டுப்பாடு தேவை என்பதைத் தாங்கள் எனக்கு அறிவுறுத்தியுள்ள போதிலும், பக்குவமின்றி, நான் ஊடகத்தில் தெரிவித்த கருத்துக்கள், தங்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அவ்வாறு, நடந்து கொண்டிருக்கக் கூடாது. குற்றத்தை உணர்ந்து, தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” என இளங்கோவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் திமுக குறித்து தவறாகப் பேசுவதாகவும், அவற்றை எல்லாம் கேட்டு தன் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த கோபத்தின் வெளிப்பாடாகவே, தனது பேட்டி அமைந்துவிட்டது என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.
“தலைமை நிலையத்தில் பணியாற்றுவோர், தலைவருக்கு எந்த வகையிலும் சிக்கல் ஏற்படுத்துபவர்களாக இருந்து விடக்கூடாது. அதை மீறி தவறிழைத்து விட்டேன். இனி எப்போதும், அத்தகைய தவறைச் செய்ய மாட்டேன்,” என்று திமுக தலைவருக்கு எழுதிய கடிதத்தில் டி.கே.எஸ்இளங்கோவன் மன்னிப்பு கோரியுள்ளார்.
அண்மையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியால் திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இளங்கோவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் என்றும், அதன் காரணமாக ஸ்டாலின் மனதில் உள்ளவற்றையே தனது கருத்துக்களாக அவர் பேட்டியில் வெளிப்படுத்தி உள்ளார் என்றும் திமுகவில் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து இளங்கோவன் பொறுப்பற்ற முறையில் பேட்டியளித்திருப்பதாகவும், அவர் கூறியது அனைத்தும் அவரது சொந்தக் கருத்துக்கள் என்றும் திமுக தலைமை உடனடியாக அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.