கோலாலம்பூர் – ‘த எட்ஜ்’ பதிப்புகளுக்கு மூன்று மாத காலம் தடை விதித்த உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் முடிவு, அறிவற்ற மற்றும் காரணமில்லாத செயல், எனவே அதனை உடனடியாகத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று எட்ஜ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எட்ஜ் சார்பில் பிரதிநிதித்த தலைமை வழக்கறிஞர் டேரியில் கூன் கூறுகையில், பிரச்சனைக்குரிய 1எம்டிபி விவகாரம் குறித்து ‘த எட்ஜ் பினான்சியல் டெய்லி’ மற்றும் ‘த எட்ஜ் பினான்சியல் வீக்லி’ ஆகிய பதிப்புகள் 300 கட்டுரைகள் வரை வெளியிட்டுள்ளன. எனினும், அதில் எது சர்ச்சைக்குரிய கட்டுரை என்பது அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
மேலும், 1எம்டிபி என்ற வார்த்தை அமைச்சரவையால் தடை செய்யப்பட்ட வார்த்தையாக இல்லை என்றும், அதை மற்ற செய்தி நிறுவனங்கள் இதுவரை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன என்றும் டேரியல் சுட்டிக் காட்டியுள்ளார்.
எட்ஜ் சார்பில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கையைப் பெற்றுக் கொண்ட நீதிபதி அஸ்மாபி முகமட், எதிர்வரும் செப்டம்பர் 21-ம் தேதி தனது முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.