சென்னை – ஜெயலலிதாவின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் தமிழக அரசிற்கு 4 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாகத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? தமிழக மக்களின் நிலை என்ன? ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் துளியும் சிந்திக்காமல் சட்டமன்றத்திற்கு வருவதும் 110 விதியின்கீழ் பத்து நிமிடம் அறிக்கை படிப்பதும், அதற்குப் பக்க வாத்தியமாக 15 நிமிடம் அதிமுக உறுப்பினர்கள் பாராட்டிப் புகழ்வதுமென இருப்பதையே முதல்வர் ஜெயலலிதா வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இப்படியெல்லாம் வாய்ஜாலம் காட்டி தமிழக மக்களை ஆட்சியாளர்கள் ஏமாற்ற முடியாது.
தமிழ்நாட்டில் அதிமுக அரசு 2011-ல் பதவி ஏற்கும்போது ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 4 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் அரசுப் போக்குவரத்துத் துறையிலும், மின்வாரியத்திலும் ரூ.2 லட்சம் கோடி அளவிற்கும் அதிகமாகக் கடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் கடனில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே போகிறது.
ஆனால் அதிமுக அரசின் டாஸ்மாக்கிற்கு, மிடாஸ் மது ஆலையிலிருந்து மட்டும் ரூ.5,413 கோடிக்கு மது கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் மிடாஸ் மது ஆலை லாபத்தில் இயங்குகிறது. ஆனால் தமிழகமோ கடனிலும், மதுவிலும் தத்தளிக்கிறது. இதுதான் தற்போதைய தமிழகத்தின் நிலையாகும்” எனக் கூறியுள்ளார்.