Home Featured கலையுலகம் பாரதிராஜாவையும், இளையராஜாவையும் பிரித்தது ‘வேதம் புதிது’ படம்!

பாரதிராஜாவையும், இளையராஜாவையும் பிரித்தது ‘வேதம் புதிது’ படம்!

1303
0
SHARE
Ad

சென்னை – மதுரை வட்டாரத்தில் அடுத்தடுத்த கிராமங்களில் இருந்து வந்து, நண்பர்களாக அறிமுகமாகி, சென்னையில், தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், இசைஞானி இளையராஜாவும்!

பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான பதினாறு வயதினிலே படத்திற்கு இளையராஜாவின் இசை, படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதோடு, இளையராஜாவின் புகழையும் உச்சிக்குக் கொண்டு சென்றது.

அதன்பின்னர் இருவரும் இணைந்த படங்களில் எல்லாம் இசையும், பாடல்களும் மக்களிடையே மிகவும் பிரபலமானது. பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்திலிருந்து கவிஞர் வைரமுத்துவும் இந்தக் கூட்டணியில் இணைந்து  கொள்ள, அவர்கள் மூவரும் இணைந்த அந்த காலகட்டம், தமிழ் சினிமாவின் இசைப்பாடல்களைப் பொறுத்தவரையில் பொற்காலமாக இன்றும் பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை. பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் இருவரும் நட்பு பாராட்டினாலும், தொழில் முறையில் ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் அவர்கள் இணையவே இல்லை.

Barathiraja-Ilayaraja-

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பாரதிராஜாவும்-இளையராஜாவும் கலந்து கொண்டபோது….

இருந்தாலும் பல நிகழ்ச்சிகளில் இருவரும் தொடர்ந்து இணைந்து கலந்து கொண்டார்கள், நட்பு பாராட்டினார்கள் என்றாலும், தொழில் ரீதியாக இணைந்து இருவரும் எந்தப் படத்திலும் பணியாற்றவில்லை.

இதற்கிடையில் இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கினாலும், இருவரும் இணைந்து பணியாற்றி, அற்புதப் பாடல்களைத் தந்த காலகட்டம் மீண்டும் மலராமலேயே போய்விட்டது.

பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையில் தொழில் ரீதியான நட்பு முறிந்து போனதற்கு பல கோணங்களில் காரணங்களை தகவல் ஊடகங்கள் இதுவரை வெளியிட்டு வந்திருக்கின்றன.

அண்மையில் தமிழகத்தின் ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டியில் தானும் இளையராஜாவும் பிரிந்ததற்கான காரணத்தை பாரதிராஜா மனம் திறந்து கூறியிருக்கின்றார்.

தனது படங்களுக்கு இசையமைத்த தேவராஜன் என்ற இசையமைப்பாளரைப் பற்றிக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்திருக்கும் பாரதிராஜா “அவர் மிகவும் புத்திசாலி. இளையராஜாவைவிட இசை அதிகமா தெரிஞ்சவன். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவன் உயரத்தைத் தொடவில்லை” என அவரைப் பற்றி புகழாரம் சூட்டியிருக்கின்றார்.

தொடர்ந்து “அந்த தேவராஜனுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கலாமே என்றுதான் ‘வேதம் புதிது’ படத்தில் அவருக்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தேன். அப்போது முதல்தான் எனக்கும் இளையராஜாவுக்கும் முறிவு ஆரம்பமானது” என்றும் பாரதிராஜா கூறியிருக்கின்றார்.

இதிலிருந்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் தொழில் முறை நட்பில் விரிசல் விழக் காரணம் ‘வேதம் புதிது’ படம்தான் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வேதம் புதிது படத்தில் பல இனிய பாடல்களை இசையமைத்து உலவ விட்டிருந்தார் தேவராஜன் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 – செல்லியல்