Home Featured இந்தியா தமிழகப் பார்வை: மாநில அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டை எதிர்க் கட்சிகள் சாடுவது நியாயமா?

தமிழகப் பார்வை: மாநில அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டை எதிர்க் கட்சிகள் சாடுவது நியாயமா?

718
0
SHARE
Ad

Chennai-global-investors-meetசென்னை: (இன்று சென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகின்றது – அதனால் பலன் இல்லை – என எழுந்துள்ள சர்ச்சைகள் – சாடல்கள் குறித்து – செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஓர் அலசல்)

இன்று முதல்வர் ஜெயலலிதாவின் ஏற்பாட்டில் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மீது தமிழக மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் பதிந்துள்ள நிலையில்,

தமிழ்நாட்டின் நலனில் கொஞ்சமும் அக்கறையில்லாத எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு இந்த மாநாடு குறித்து எதிர்மறையான கருத்துகள் தெரிவித்து வருவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த மாநாட்டில் மலேசியாவில் இருந்தும் நிறைய வணிகர்களும், முதலீட்டாளர்களும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

jayalalitha (1)சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், எங்கே இந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஜெயலலிதாவின் தோற்றத்தையும், மதிப்பையும், வாக்காளர்கள் மத்தியில் –

குறிப்பாக படித்தவர்களின் மத்தியில், உயர்த்தி விடுமோ, என்ற அச்சத்தில், எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு, இந்த மாநாட்டைச் சாடத்தொடங்கியுள்ளன.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை ஆராய்ந்து பார்த்தால், அவை முழுவதும் தமிழகத்தின் மீதும், தமிழக மக்களின் நலன்களின் மீதும் கொஞ்சமும் அக்கறையில்லாத

– நடப்பு வணிக, பொருளாதார, நடைமுறைகளை அறிந்து கொள்ளாமல் கூறப்பட்டிருக்கும் முரண்பாட்டு வாசகங்கள் என்பது புலப்படும்.

விஜயகாந்த்-பிரேமலதா தம்பதியரின் சாடல்

vijayakanthஉதாரணமாக – “முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் முதலீடுகள் வந்து சேருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது ஏன் முதலீட்டாளர்கள் மாநாடு. இது வெறும் கண்துடைப்பு” என்று ஒரு பொருளாதார மேதைபோல் கூறியிருக்கின்றார் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.

மக்களைத் திசை திருப்பவே முதலீட்டாளர்கள் மாநாடு என வசைமாரி பொழிந்திருக்கின்றார் விஜயகாந்த்!

நடப்பது, தமிழ்நாட்டில் தொழில்களையும், முதலீடுகளையும் ஈர்க்கும் மாநாடு. இதை ஜெயலலிதா நடத்தினால் என்ன, எந்தக் கட்சி நடத்தினால் என்ன? பலன் தமிழ் நாட்டுக்குத்தானே!

அப்படியே சில ஆண்டுகள் கழித்துத்தான், முதலீடுகள் வந்து சேருமென்றாலும், அதற்கான அடித்தளத்தை இப்போதே அமைத்துக் கொள்வது நல்லதில்லையா? புத்திசாலித்தனமில்லையா?

வருகின்ற முதலீடுகள், சில ஆண்டுகள் கழித்து வந்தாலும் – ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத காலத்தில் வந்தாலும் – அவை தமிழ் நாட்டு மண்ணை நோக்கித்தானே வந்து சேரும்?

ஏறத்தாழ ஐயாயிரம் வணிகர்கள், உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொள்ளும் இத்தகைய மாநாடுகளினால் பலன்கள் ஒரே இரவில் நிகழ்ந்து விடாது.

தமிழ் நாட்டின் வளங்கள் – வணிக சாதகங்கள் – மாநில அரசின் சலுகைகள் – எத்தகைய முதலீடுகளுக்கு மாநில, மத்திய அரசாங்கங்களின் ஆதரவும், அரவணைப்பும் – எந்த முதலீடுகளுக்கு எந்த மாவட்டங்கள் உகந்தவை – எந்தப் பகுதி நிலங்கள் எந்த வணிகங்களுக்குப் பொருந்தும் – எந்தப் பகுதிகளில் சுலபமாக தொழிலாளர்கள் கிடைப்பார்கள் – என்பது போன்ற பல அம்சங்களை முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் இத்தகைய மாநாடுகளின் நோக்கம்.

எனவே, இத்தகைய மாநாடுகள் எப்போது நடந்தாலும், எந்த காலகட்டத்தில் நடைபெற்றாலும், எந்தக் கட்சி நடத்தினாலும், அதைப் பாராட்டுவதுதான் மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளின்  அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலினின் கிண்டல்

“இது அதிமுக முதலீட்டாளர்களின் மாநாடு” எனக் கிண்டலடித்திருக்கின்றார் திமுகவின் மு.க.ஸ்டாலின்.

stalin_2279600gஅடுத்தது எங்கள் ஆட்சிதான் என்று கூறும், திமுகவினர், முதலீட்டாளர்கள் மாநாட்டினால் கிடைக்கும் பலன்களை நாங்கள் அறுவடை செய்வோம், நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம், வருகின்ற முதலீடுகளைக் கொண்டு மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வருவோம் – என்றல்லா கூறியிருக்க வேண்டும்?

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி இராமதாசும் இதே போன்ற கருத்தைக் கூறி, அரசியலுக்காக செய்கின்றார்கள் என சாடியிருக்கின்றார்.

எதிர்க்கட்சிகளின் பார்வையிலேயே பார்த்தோமானால், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தமிழகத்தில் ஆறாக ஓடிய மதுப் பிரச்சனைகளையும், டாஸ்மாக் கடைப் பிரச்சனைகளையும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், இப்போது மட்டும் இந்த அரசியல் கட்சிகள் எல்லாம், ஒரேயடியாக டாஸ்மாக் பிரச்சனையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும், மதுவிலக்கு குறித்துப் பேசுவதும் அரசியல் இல்லையா?

ஆட்சிக்கு வந்த பின் ஜெயலலிதா உடனடியாக இத்தகைய முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியிருக்க வேண்டும் என்று கூறுவது நல்ல ஆலோசனைதான்!

ஆனால், இதே எதிர்க்கட்சிகள் உண்மையிலேயே தமிழ் நாட்டின்மீது அக்கறை கொண்டிருந்தால், அப்போதே – அதாவது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனேயே – இப்படி ஒரு ஆலோசனையை முன் வைத்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

அதற்கென்று இப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதை குறை கூறலாமா? அரசியல் என்று சாடலாமா?

இதுதான், அரசியல் என்று வரும்போது தனித் தீவாக இயங்கும் தமிழகத்திற்கு நேர்ந்திருக்கும் சாபக்கேடு!

தமிழ் நாட்டிற்கு எவ்வளவுதான் நன்மை பயக்கும் திட்டமாக இருந்தாலும் – அதனை ஒரு குறிப்பிட்ட கட்சி – அதுவும் தங்களுடன் அரசியல் ரீதியில் நட்பு கொள்ளாத ஒரு கட்சி நடத்துகின்றது என்ற ஒரே காரணத்திற்காக எதிர்ப்பதும், சாடுவதும் தமிழக அரசியலின் முத்திரை.

எப்போது நடைபெற்றாலும், யார் நடத்தினாலும், முதலீட்டாளர்கள் மாநாடு என்பது –

ஒரு மாநிலத்திற்கு – அதன் மக்களுக்கு, எல்லா காலத்திலும் நன்மைகளைக் கொண்டு வரும் ஒரு நல்ல திட்டம் – என்ற அடிப்படையில்,

இன்று சென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – தமிழ்நாட்டு மக்களுக்கு – தமிழர்களுக்கு – நன்மைகளைக் கொண்டு வரும் – கொண்டுவர வேண்டும் என வாழ்த்தி வரவேற்போம்.

-இரா.முத்தரசன்