கோலாலம்பூர் – “தலைவர்கள் அரசியல் பிரச்சனைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், தொழில்துறை முன்னேற்றத்திற்கும், மக்கள் பிரச்சனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என ஏர் ஆசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பெர்னாண்டஸ் அளித்துள்ள பேட்டியில், “தென் கிழக்கு ஆசியாவில் நாங்கள் வலுவான இடத்தைப் பிடிப்பதற்கு இதுவே சரியான தருணம். சுய நிதி நிறுவனங்களின் எழுச்சி தான், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். அதனால், ஒரு வர்த்தகராக நான் கூறுவதெல்லாம் என்னவென்றால், அரசியல்வாதிகள் பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். அரசியல் பிரச்சனைகளை கைவிட்டு, மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.”
“மலேசியாவில் மட்டுமல்ல, தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில், மக்கள் பிரச்சனைகளை விட அரசியல் பிரச்சனைகள் முன்னிறுத்தப்படுகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதமும், பெர்னாண்டஸ் இதே கருத்தை தெரிவித்து இருந்தார். அவர், “மலேசிய அரசு, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, கல்வியை மேம்படுத்துவது போன்ற முக்கியப் பிரச்சனைகளை விடுத்து, அரசியல் பிரச்சனைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்துகிறது” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.