ஹைதராபாத்-விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது ஹைதராபாத்தில் நாச வேலைகளில் ஈடுபடத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய தீய நோக்கத்துடன் சுமார் 2 ஆயிரம் பேர் அந்நகருக்குள் ஊடுருவியுள்ளதாக வாட்ஸ் அப் மூலம் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்ட ஒரு பெண் துபாயில் இருந்து நேற்று முன்தினம் ஹைதராபாத் வந்தபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஹைதராபாத் நகரில் வாட்ஸ் அப் மூலம் பரபரப்புத் தகவல் பரவி வருகிறது.
மிக விரைவில் ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கும் விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தவும், அசம்பாவிதங்களை நிகழ்த்தவும், 2 ஆயிரம் பேர் ஊடுருவி உள்ளனர் என்றும், இவர்களில் 145 பேரை மெகபூப் நகர் போலீசார் கைது செய்துள்ளதாகவும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘கேய்ஸ் கேங்’ என்ற பெயரில் பரவி வரும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே புரளி என ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது. மெகபூப் நகர் காவல்துறையினரால் யாரும் கைது செய்யப்படவில்லை என ஹைதராபாத் நகர சிறப்பு படை பிரிவு இணை ஆணையர் நாகி ரெட்டி கூறியுள்ளார்.
வாட்ஸ் அப் மூலம் இப்படியொரு தகவலை பரப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.