எந்த தேர்தல் என்றாலும் தனித்து போட்டியிட முடியும் என்று ஜெயலலிதா துணிந்து நிற்கும் பொழுது, சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி என மாறி மாறி கூட்டணி வைத்து பழக்கப்பட்ட பா.ம.க கூட 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்திருக்கும் பொழுது, பாரம்பரியம் மிக்க திமுகவால் அது முடியாமல் போகிறது.
எளியவர்களின் கட்சி, எளியவர்களுக்கான கட்சி என கருதப்பட்டு வந்த திமுக இன்று, கருணாநிதி குடும்பத்தினரின் கட்சியாக மாறிப் போனது தான் இந்த நிலைக்கான மிக முக்கியக் காரணம் என்பது பலமுறை பெரும்பாலானோரால் விவாதிக்கப்பட்ட ஒன்று தான். சரி, தற்போதய சூழலில், திமுக-வின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது யூகிக்கக் கூடிய ஒன்றாகத் தான் உள்ளது.
வெளியில் இருந்து பார்க்கையில், மக்கள் நலன் காக்கும் கூட்டணி பலமாக இருப்பது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் சற்றே உரசல்களுடன் தான் இருக்கின்றது. மக்கள் நலன் காக்கும் கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளான ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் மொத்த வாக்கு வங்கி 7 சதவீதம் தான் என்பது இந்த கூட்டணியின் மிகப் பெரும் பலவீனமாகும்.
அதுமட்டுமல்லாமல், விடுதலைசிறுத்தைகளுடன் கூட்டணி சேர்ந்தால், வாக்கு வங்கி பாதிக்கும் என்ற கலக்கமும் ம.தி.மு.க மாவட்ட செயலர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த பலவீனங்களைத் தான் கருணாநிதி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களைத் தங்கள் பக்கம் இழுப்பது கருணாநிதிக்கு பெரிய சிரமத்தைக் கொடுக்காது. தமிழகத்தில் அதிமுக-வைத் தவிர ஏனைய கட்சிகளுடன் திமுக எதிர்காலத் தேவைகள் கருதி எப்போதும் தோழமைப் போக்கையே இதுவரை கடைப்பிடித்து வருகிறது. அதனால், தற்போது திமுகவின் ஒரே எண்ணம் விஜயகாந்த் மற்றும் இளங்கோவனை தங்கள் பக்கம் இழுப்பது தான். இவர்களை தங்கள் பக்கம் கொண்டு வந்து விட்டால், மக்கள் நலக் கூட்டணியில், ஒரு சிலக் கட்சிகளை விடுத்து மற்ற கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு மிகப் பெரும் கூட்டணியை உருவாக்கி தேர்தலை தைரியமாக சந்திக்கலாம். இதுவே தற்போது கருணாநிதியின் எண்ண ஓட்டமாக உள்ளது.
எனவே அடுத்த சில மாதங்களில், கருணாநிதி கண்கள் பனிக்க, இதயம் இனிக்க புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இராஜதந்திரங்களை கரைத்துக் குடித்தவர் அல்லவா..
– சுரேஷ்