ஐதராபாத் – ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே குண்டெப்பள்ளி என்ற இடத்தில் சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; 20 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று அதிகாலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து விசாகப்பட்டிணத்திற்குச் சாம்பல் ஏற்றிக் கொண்டு, 30க்கும் மேற்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களுடன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
குண்டெப்பள்ளி அருகே சாலையின் வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் திடீரெனத் தூங்கிவிட்டதே விபத்திற்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திர நிதி அமைச்சர் எனமல ராமகிருஷ்ணுடு, உள்துறை அமைச்சர் நிம்மகயலா சின்ன ராஜப்பா இருவரும் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.