ஜெனீவா – ஜெனீவாவில் இன்று தொடங்க உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில், இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில் போர் விதிமுறைகளை மீறி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று குவித்தனர்.
இது மனித உரிமை மீறல் என்று உலக நாடுகள் குற்றம் சுமத்தின. இப்போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய ஐநா மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக் குழு நியமித்து விசாரணை மேற்கொள்ள இலங்கைக்குப் புறப்பட்டது.
ஆனால், ராஜபக்சே இந்த ஐநா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியடைந்து, சிறிசேனா அதிபராகப் பதவியேற்றதும் ஐநா விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
ஐநா விசாரணை குழு விசாரணை மேற்கொண்டு தனது விசாரணை அறிக்கையைத் தயாரித்து இலங்கை அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை குறித்த பதில் அளிக்க இலங்கை அரசுக்கு 5 நாட்கள் அவகாசமும் தரப்பட்டது. இலங்கை அரசும் குறித்த காலத்திற்குள் பதில் அறிக்கை அளித்தது.
இந்நிலையில், ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 3 வாரக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.அதில் இலங்கை போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையையும், அத்துடன் இலங்கை அரசின் பதில் அறிக்கையும் தாக்கல் செய்கிறது.