Home இந்தியா இல்லம் தோறும் இணையவழிச் சேவை: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு!

இல்லம் தோறும் இணையவழிச் சேவை: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு!

626
0
SHARE
Ad

jayalalitha (1)சென்னை – சட்டப் பேரவை விதி 110ன் கீழ், அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம் இல்லம் தோறும் குறைந்த செலவில் இணைய சேவை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாடு காரணமாக 9 நாட்களுக்குச் சட்டமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

விடுமுறை முடிந்து இன்று மீண்டும் சட்டமன்றம் தொடங்கியது.

#TamilSchoolmychoice

இன்றைய சட்டமன்றக் கூட்டத்தின் போது பேசிய முதல்வர் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு, தமிழக அரசின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக அறிந்து கொள்ள இணையவழித் தொலைக்காட்சித் திட்டம் நிறை வேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வாசித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற புறநானூற்று பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையிலும், உலகமே உள்ளங்கையில் என்னும் வகையிலும் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் எனது தலைமையிலான அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பின்வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை ஆப்டிக்கல் பைபர் மூலமாக இணைத்து அரசின் சேவைகளை இணையம் மூலமாக பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில் “பாரத்நெட்” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் தமிழ்நாடு அரசின் மூலமாகத் தான் செயல்படுத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தியதன் அடிப்படையில், மத்திய அரசு இத்திட்டத்தினை தமிழகத்தில் தமிழ்நாடு அரசே செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு தமிழக அரசின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் நிறை வேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”எனக் கூறினார்.

இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கென ‘தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன்’ என்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.