மதுரை- கிரானைட் கற்களை எடுக்க நரபலி கொடுக்கப்பட்டது என்கிற செய்தி தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மதுரையின் சுற்று வட்டாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு அலைபவர்களை, மறுவாழ்வுக்கு வழி பண்ணுகிறோம் என்று அழைத்து வந்து கழுத்தை அறுத்துக் கொன்று, நரபலி கொடுத்துவிட்டுப் பின்பு புதைத்துவிட்டதாகச் சேவற்கொடியோன் என்பவர் சொன்ன புகாரை அலட்சியம் செய்யாமல் விசாரணை அதிகாரி சகாயம் அதிரடி நடவடிக்கையில் இறங்கிவிட்டார்.
நரபலி கொடுத்துப் புதைக்கப்பட்டதாகச் சேவற்கொடியோன் குறிப்பிட்ட இடத்தைத் தோண்டச் சொன்னபோது காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.தோண்டாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று சொல்லி சுடுகாட்டிலேயே இரவு தங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டார் சகாயம்.
அதன்பின்பே காவல்துறையினர் சட்ட நடைமுறைப்படி தோண்ட ஆரம்பித்தனர். குறிப்பிட்ட இடத்தில் 4 எலும்புக் கூடுகளும் 7 மாதக் குழந்தையின் எலும்புக் கூடும் தோண்டி எடுக்க்கப்பட்டது. எலும்புக் கூட்டோடு பூசை செய்து புதைத்ததற்கான அடையாளமாகச் சில பொருட்களும் துணிகளும் கிடைத்துள்ளன.
அந்த எலும்புக் கூடுகளைத் தடயவியல் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தை வெளி உலகிற்குக் கொண்டு வந்த சேவற்கொடியான் கிரானைட் குவாரி வாகனங்களுக்கு ஓட்டுநராக இருந்தவர்.
இந்த நரபலிக் கொடுமையை நேரில் பார்த்துப் பயந்து போய் 2003-ஆம் ஆண்டே வேலையிலிருந்து நின்று விட்டதாகச் சொல்கிறார்.
அப்போதிருந்தே இந்தப் புகாரைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இது சம்பந்தமாக அவருக்குக் கொலை மிரட்டல்களும் வந்தன.
ஆனால் எதற்கும் பயப்படாமல் இத்தனை ஆண்டுகளாகப் போராடி,சகாயம் விசாரணை அதிகாரியாக வந்த பிறகுதான் அவரது புகாருக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.
நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ள எலும்புகளில் முக அமைப்பு சிதையாமல் இருந்தால், தடயவியல் மூலம் உருவத்தை வரைந்து அடையாளம் காண முடியும் என்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தலைவர் ரேவதி தெரிவித்துள்ளார்.
அப்படி நரபலி கொடுக்கப்பட்டது உண்மை என்று நிரூபணமானால் கிரானைட் உரிமையாளருக்குக் கடுமையான தண்டனை கிடைக்கப் போவது உறுதி.
இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக விசாரணை அதிகாரி சகாயம் தகவல் தெரிவித்துள்ளார்.