சென்னை – “ஐஏஎஸ் அதிகாரிக்கு என்று கடமை, பொறுப்பு இருக்கிறது. தனது பணியை நேர்மையுடன் செய்வது மட்டுமல்ல, வீண் விளம்பரங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் செயல்பட வேண்டும். ஆனால், சகாயம் விளம்பரத்திற்காக தரையில் அமர்வது, இட்லி சாப்பிடுவது, ஊடகங்களை வரவைத்து தம் இருப்பைக் காட்டிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்” என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முருகன்(படம்), சகாயத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
கிரானைட் குவாரி முறைகேட்டு வழக்கில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது. அதுவும் அவரது குழுவினர் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளை நட்பு ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே சமயத்தில் சகாயத்தின் மீது விளம்பரதாரி என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டு வருகிறது.
அதன் வெளிப்பாடு தான் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முருகனின் சமீபத்திய குற்றச்சாட்டு. சகாயம் குறித்து முருகன் பிரபல வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக ஒருவர் வந்து கூறியிருந்தால், புகார் வாங்கி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வேண்டும். இதுதான் நடைமுறை. இப்படிதான் செயல்பட வேண்டும்.”
“ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல்வாதி மாதிரி ஆர்ப்பாட்டமான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது. சகாயம் போன்று எந்த ஐஏஎஸ் அதிகாரியும் செய்ய மாட்டார். செய்யவும் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.