ஈரானிய திரைப்பட இயக்குநரான மஜித் மஜிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், வெளிவந்துள்ள திரைப்படம் ‘முஹம்மதாகிய இறைத்தூதர்’ (Muhammad: Messenger of God). முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்த படம், முகமது நபியின் புகழுக்குக் களங்கம் கற்பிப்பது போல அமைந்து விடும் என்று கூறி சில இஸ்லாமிய அமைப்புகள், இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இந்த படத்தை எடுத்த மஜிதி, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு ஃபத்வா கொடுக்கிறோம் என்றும் அறிவித்தன.
இந்நிலையில், இது தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், ”நான் அல்லாவை சந்திக்கும் அதிர்ஷ்டம் இருந்து அவரை சந்திக்கும் நாளன்று: உனக்கு நான் நம்பிக்கை, திறமை, பணம், புகழ் மற்றும் ஆரோக்கியத்தை கொடுத்து இருக்கிறேன். நீ ஏன் என் பிரியமான முஹம்மது படத்திற்கு இசை அமைக்க வில்லை என்று கேட்பார். இந்த ஈரானிய படம் மனிதர்கள் மத்தியில் ஒற்றுமையை தான் வலியுறுத்தியுள்ளது.”
“மனிதநேயத்தை வலியுறுத்தி, அவநம்பிக்கைகளை களையும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் தான் ஈரானிய திரைப்படத்திற்கு இசையமைத்தேன்” என்று கூறியுள்ளார்.