சென்னை – இன்று வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தினரும் களமிறங்குகின்றனர். காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர் சங்க கட்டிட வளாகத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாத நடிகர் அஜித் குமார், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கூட கலந்து கொள்வதில்லை. தனது சொந்தப் படம் வெளியிடப்படும்போது கூட, அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளிலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ, கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார் அஜித். தனது படம் அதன் தரத்தினால் ஓட வேண்டும், தான் செய்யும் விளம்பரத்தினால் ஓடக் கூடாது என்ற சிந்தனை கொண்டவர்.
ஆனால், இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜித்தும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானும் உண்ணாவிரதம் கடைப்பிடிக்கிறார்
தமிழ் நாட்டின் உணர்வுகளை மதித்து, தானும் இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.
நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் நாட்டின் உணர்வுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை நானும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்” என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்புகளும் இன்று போராட்டத்தில் குதிப்பதால், தமிழ் நாடு முழுக்க நாளை நிலைகுத்தி நிற்கும் நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.