(ஆஸ்திரேலியாவில் திடீரென பிரதமர் பதவி மாற்றம் ஏன் ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது பார்வையில் விவரிக்கும் கட்டுரை)
கான்பெரா – திடீரென யாரும் எதிர்பாராத வண்ணம், ஆஸ்திரேலியாவில் பிரதமர் மாற்றம் ஏற்பட்டது என்ற அதிர்ச்சிச் செய்தி, உலக அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக முக்கிய பொருளாதார மண்டலம் என்ற முறையில் – பல நாடுகளின் பொருளாதாரப் பின்னணியோடு பின்னிப் பிணைந்துள்ள ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ள இந்தப் பதவி மாற்றம், மிக முக்கியமானதாக அரசியல் பார்வையாளர்களால் கண்காணிக்கப்படுகின்றது.
ஏன் இந்த திடீர் மாற்றம்?
நேற்றுவரை பிரதமராக இருந்த டோனி அப்போட் – இன்று முதல் பிரதமராகும் மால்கம் டர்ன்புல்
ஆஸ்திரேலியாவில் எப்போதும் ஒரு சிறப்பான ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றுவார்கள்.
முதலில் பொதுத் தேர்தல் முடிந்ததும் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்னதான் நடந்தாலும் (நம் நாட்டில் இருப்பதைப் போல்) அவர்தான் பிரதமர் என்ற நிலைமை ஆஸ்திரேலியாவில் இல்லை. ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதமரின் தலைமைத்துவ ஆற்றல், அவரது அரசாங்கத் திட்டங்கள், நடவடிக்கைகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
அவர் சிறப்பாக செயல்படுகின்றார் என்றால் விட்டு விடுவார்கள். இல்லாவிட்டால் ஆளும் கட்சியிலிருந்து மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் முன்வந்து, நான் நடப்பு பிரதமரைவிட சிறப்பாக செயல்படுவேன் எனத் தனது திட்டங்களை முன்வைத்து பிரதமர் பதவிக்கான போட்டிக் களத்தில் குதிப்பார். அதைத் தொடர்ந்து ஆளும் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மட்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
புதிய ஆஸ்திரேலியப் பிரதமர் டர்ன்புல்
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ, அவரே அடுத்த பிரதமராவார்.
ஒரு பிரதமர் வாக்களிப்பு நடப்பதை நாடாளுமன்ற அவைத் தலைவர் மூலம் தடுத்து நிறுத்துவதோ (மீண்டும் நம் நாட்டின் உதாரணத்தைப் போல) வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முன்வராமல், ஒரு பிரதமர் “இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவேன், மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் பதவிவிலக மாட்டேன்” என்றெல்லாம் வீரவசனம் பேசிக் கொண்டிப்பதோ ஆஸ்திரேலியா அரசியலில் நடக்காது. வறுத்தெடுத்து விடுவார்கள்!
அவ்வாறு வாக்கெடுப்பு நடந்து நடப்பு பிரதமர் தோல்வியடைந்தால், மரியாதையுடன், ஒதுங்கிக் கொண்டு, புதிய பிரதமருக்கு அவர் வழி விடுவார்.
நேற்றும் அதுதான் நடந்தது.
புதிய பிரதமராக டர்ன்புல் தேர்வு
நடந்த வாக்கெடுப்பில் டர்ன்புல் 55 வாக்குகள் பெற்று வெற்றிபெற, அப்போட்டிற்கு 44 வாக்குகளே கிடைத்திருக்கின்றது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த வாக்கெடுப்பு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்படாது என்பதுடன், அரசாங்கத்திற்கு எதிராகவோ, நடப்பு பிரதமருக்கு எதிராகவோ எந்தவொரு நம்பிக்கையில்லாத் தீர்மானமும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படாது.
இன்று காலை பிரதமராகப் பதவியேற்கவும் – தனது பணிகளைத் தொடக்கவும் தயாராகும் டர்ன்புல் (அவரது டுவிட்டர் பக்கப் படம்)
மாறாக, ஆளும் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில்தான் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒரு சுய பரிசோதனையாகவும், பிரதமராக இருப்பவரின் செயல்பாட்டிற்கு வைக்கப்படும் ஒரு தேர்ச்சித் தாளாகவும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகின்றது.
சரிவு கண்டு வந்த டோனி அப்போட்டின் செல்வாக்கு
கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான டோனி அப்போட்டின் செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டில் சரிவு கண்டு வந்தது. லிபரல் கட்சி-தேசிய கன்சர்வேடிவ் கட்சி என இரண்டு கட்சிகள் இணைந்து தற்போது ஆஸ்திரேலியாவில் ஆட்சி அமைத்துள்ளன.
டோனி அப்போட், மால்கம் டர்ன்புல் இருவருமே லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்கள். நேற்றைய தேர்வின் மூலம், லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகவும், அதன்வழி பிரதமராகவும் டர்ன்புல் தேர்வு பெற்றுள்ளார்.
பிரதமராக தனது இறுதி உரையை ஆற்றும் டோனி அப்போட் – சுமுகமாக பதவி மாற்றத்திற்கு ஒத்துழைப்பேன் என உறுதி கூறியுள்ளார் அப்போட்…
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் இந்தக் கூட்டணி ஆட்சி தோல்வியடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
காரணம், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் தற்போது இறங்கு முகமாக இருக்கின்றது. முறையான பொருளாதார முன்னெடுப்பு திட்டங்கள் எதையும் டோனி அப்போட் முன் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அந்நாடு பொருளாதார வீக்கத்தைக் கூடிய விரைவில் அடையும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் ஆளும் கட்சியின் தலையெழுத்தை நான் மாற்றிக் காட்டுகின்றேன் என முன்வந்தார் மால்கம் டர்ன்புல். பிரதமர் போட்டியில் குதித்தார். வெற்றியும் பெற்றார்!
யார் இந்த டர்ன்புல்?
60 வயதான டர்ன்புல் ஒரு முன்னாள் முதலீட்டு வங்கி நிர்வாகி ஆவார். சிட்னி பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் படித்தவர்.
பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர் இவர் என்பதால், ஆஸ்திரேலியாவின் பொருளாதார நிலைமையைச் சீர்படுத்துவார் என்ற நம்பிக்கையோடு, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரை நாட்டின் 29வது பிரதமராகத் தேர்வு செய்துள்ளனர்.
உணவு உற்பத்தி, பலதரப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி, கனிம வளங்களின் ஏற்றுமதி ஆகிய காரணங்களால், கடந்த 24 ஆண்டுகளாக, ஏறுமுகமாகவே இருந்து வந்த ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 0.2 சதவீதமாக மட்டுமே வளர்ச்சி கண்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி இதுவாகும்.
கனிம வளங்களின் கையிருப்பு குறைந்து வருவதால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இதற்கு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகின்றது.
எனவே, தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் தேவை புதிய பொருளாதார அணுகுமுறையும், வித்தியாசமான பொருளாதாரப் பார்வை கொண்ட பிரதமரும்தான்!
டர்ன்புல் என்ற பெயரின் அர்த்தமே ‘திரும்புகின்ற காளை’ என்பதாகும். ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை திருப்புவாரா டர்ன்புல் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு!
அதோடு உலகமெங்கும் பங்கு முதலீட்டுச் சந்தைகள் ஏறுமுகமாக இருக்கும்போது அதன் சின்னமாக இருப்பது காளை மாடுதான். பங்கு விலைகள் அபரிதமாக உயரும்போது ‘புல்ரன்-Bull Run’ என்பார்கள்.
இப்படி நவீனப் பொருளாதாரத்துடன் பெயர் தொடர்பு கொண்ட மால்கம் டர்ன்புல் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைத்து ஏறுமுகமாக்கிக் காட்டுவாரா என்பதற்காக ஆஸ்திரேலியர்கள் இன்று முதல் காத்திருப்பார்கள்!
-இரா.முத்தரசன்