ஹூஸ்டன் – ‘பேஸ்புக்’ நிறுவனம் அதன் வலைதளத்தில் ‘dislike’ போன்று புதியதொரு வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் like, comment, share செய்ய வசதிகள் உள்ளன. ஆனால், ஒரு போஸ்ட் பிடிக்கவில்லை என்றால் dislike செய்யும் வசதியில்லை.
அதேபோன்ற வசதி பேஸ்புக்கில் தரப்பட வேண்டும் என்று பேஸ்புக் நிறுவனத்திற்குப் பல பயனாளர்கள் இ-மெயில் மூலம் இக்கோரிக்கையைத் தெரிவித்து வந்தனர். இது குறித் மார்க் தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “டிஸ்லைக் பொத்தானைப் பொருத்த வேண்டும் என்பது பல கோடி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
லைக் அல்லது டிஸ்லைக் போட்டு வாக்களிக்கும் ஒரு தளமாகப் பேஸ்புக்கை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.
அதேநேரம், சோகம், இறப்பு போன்ற தகவலைப் பதிவு செய்யும்போது, லைக் பொத்தானை அழுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இருப்பது மாற்றப்பட வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம்.
ஆகையால், ஒரு போஸ்ட்டிலுள்ள தகவலைப் புரிந்துகொண்டு, அதற்கான தனது மனநிலையை வெளிப்படுத்தும் வகையிலான பொத்தான் உருவாக்கப்படும்.
அது மிகவிரைவில் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட உள்ளது. அதன் வெற்றியைப் பொருத்து, மேலும் புதிய முயற்சிகளை உருவாக்குவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.