ஜார்ஜ் டவுன் – வெறிநாய் கடி மூலம் பரவும் கொடிய தொற்று நோயான ரேபிஸ் மலேசியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது, பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் அந்நோய் மீண்டும் பரவி வருகின்றது.
நோய் பரவிய நாய்கள் மற்றும் சில பாலூட்டிகள் கடிப்பதன் மூலம் பரவும் ரேபிஸ் நோய்க்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கடிபட்டவருக்குக் காய்ச்சல், தலைவலி, தசைவலி, மூளை வீக்கம், வலிப்பு, கோமா ஆகியவை ஏற்பட்டு மரணமடைய நேரிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, செபராங் பிறையில் போக்கோக் சேனா என்ற பகுதியில் 44 வயதான ஆண் ஒருவர் ரேபிசால் பாதிக்கப்பட்டிருப்பது முதலில் தெரியவந்ததாக, பினாங்கு சுகாதாரத்துறைத் தலைவர் டாக்டர் அஃபிப் பஹார்டின் தெரிவித்துள்ளார்.
பாலே புலாவில் உள்ள தாமான் நெலாயனில் 11 வயது சிறுவனுக்கு ரேபிஸ் கண்டிருப்பது இரண்டாவது சம்பவமாகப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெர்லிஸ் பகுதியில் இருந்து இந்த நோய் பரவியிருப்பதாக டாக்டர் அஃபிப் தெரிவித்துள்ளார்.
பெர்லிஸ் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி, 22 வயது நபருக்கு ரேபிஸ் நோய் பரவியிருப்பது கண்டறியப்பட்டதாக கால்நடை சேவைத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் குவாசா நிசாமுடின் ஹசான் நிசாம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி, கெடாவில் 5 பேருக்கு தெரு நாய் கடித்து ரேபிஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.