Home Featured இந்தியா நேதாஜி தொடர்பான 64 ரகசிய ஆவணங்கள் இன்று வெளியீடு : விரிவான செய்திகள்

நேதாஜி தொடர்பான 64 ரகசிய ஆவணங்கள் இன்று வெளியீடு : விரிவான செய்திகள்

548
0
SHARE
Ad

18-1442545149-netaji-subash-chandra-bose-6000கொல்கத்தா – மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான, 1937 முதல் 1947-ஆம் ஆண்டு வரையிலான 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு இன்று வெளியிட்டது.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது, 1939–ஆம் ஆண்டு மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விலகி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் சுபாஷ் சந்திரபோஸ்.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்க அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று அவர்களுடைய ராணுவ நடவடிக்கைகளை ஆராய்ந்து, அதன்படி இந்தியாவில் நிறுவி, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி வந்தார்.

#TamilSchoolmychoice

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்ற கொள்கையின்படி அறவழியில் போராடினார் காந்தி. ஆனால் இவரோ, ‘கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் யுத்தம் இல்லை’ என்று அதிரடி வழியில் போராடினார்.

இந்நிலையில் அவர் 1945–ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18–ஆம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை.

இந்த விமான விபத்துக்குப் பின்பு, அவர் முந்தைய சோவியத் ரஷியா நாட்டில் காணப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. இதனால் நேதாஜி இறந்து விட்டாரா?அல்லது உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை இன்று வரை நீடித்து வருகிறது.

அன்றிலிருந்து இன்றுவரை பல ஆண்டுகளுக்கும் மேலாக நேதாஜி தொடர்பான 100க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை மேற்குவங்காள அரசு பராமரித்து வருகிறது. அவற்றைப் பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தன.

இதுகுறித்து மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. நேதாஜி தொடர்பாக மேற்கு வங்க உள்துறை அமைச்சகத்திடம் 64 ரகசிய ஆவணங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.

அந்த ஆவணங்கள் அனைத்தையும் முறைப்படி ஆய்வு செய்தபிறகு, செப்டம்பர் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவற்றை பகிரங்கமாக வெளியிட முடிவு செய்துள்ளோம்” எனச் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அதன்படி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்களை மேற்கு வங்காள அரசு இன்று வெளியிட்டது.

12,744 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள், பொதுமக்கள் பார்வைக்காகப்  பதிவேற்றம் செய்யும் பணி துவங்கியுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட  இந்த 64 ஆவணங்களும், அங்குள்ள காவல் அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் வரும் திங்கட்கிழமை முதல், பொதுமக்கள் பார்வைக்காக  வைக்கப்படுகின்றன.

மேலும், ஆவணங்கள் அடங்கிய குறுந்தட்டு நேதாஜி குடும்பத்தினரிடமும் ஒப்படைக்கப்பட்டது.