வாரணாசி – பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்குச் சென்றார். ஏற்கனவே இரண்டு முறை அவருடைய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் வாரணாசி சென்றார்.
அவரை மாநில ஆளுநர் ராம்நாய்க், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.
வாரணாசியில் அவர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ரிக்ஷா தொழிலாளிகளுக்கு இ ரிக்ஷா மற்றும் மூன்று சக்கர வண்டிகளை வழங்கினார். மேலும், ஆயிரம் சோலார் விளக்குகளையும் பயனாளிகளுக்கு அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “வறுமையை ஒழிப்போம் என்று முந்தைய ஆட்சியினர் கூறி வந்தனர். ஆனால் 5 ஆண்டுகளாகியும் அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை.
வங்கிகளை நாட்டுடமையாக்கி 50 ஆண்டுகளாகியும் ஏழைகளுக்கு வங்கிச் சேவை கிடைக்கவில்லை. எங்கள் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு வங்கிச் சேவை கிடைக்கச் செய்துள்ளோம்.
இதன் மூலம் குறுகிய காலத்தில் ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்குப் பணம் வங்கியில் சேர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளில் செய்யத் தவறியதை நான் 50 மாதங்களில் நிறைவேற்றுவேன்” என்று அவர் சூளுரைத்தார்.