மதுரை- மதுரையின் புறநகர்ப் பகுதியான மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிரானைட் கல் குவாரிகள் உள்ளன. அக்கல் குவாரிகளால் அரசுக்கு 1600 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்னும் புகாரைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கிரானைக் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் 12 பேர் புதைக்கப்பட்டிருப்பதாகச் சேவற்கொடியோன் என்பவர் கொடுத்த பரபரப்பான புகாரால் கடந்த 12-ஆம் தேதி அந்த இடத்தைத் தோண்ட உத்தரவிட்டார் சகாயம்.
காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தடயவியல் துறையினர் முன்னிலையில் தோண்டும் பணி நடைபெற்று ஒரு குழந்தையின் எலும்புக் கூடு உட்பட 4 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை தற்போது மதுரை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் தங்களின் உறவினர்களுடையது என சின்ன மலம்பட்டியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், 4 எலும்புக் கூடுகளில் 2 எலும்புக் கூடு பெண்களுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் மண்டை ஓடு, சின்னமலம்பட்டியைச் சேர்ந்த செல்வி என்பவரது 8 மாதப் பெண் குழந்தையினுடையது என்பதும், காவித் துணியுடன் கிடைத்த எலும்புக்கூடு சின்னமலம்பட்டியைச் சேர்ந்த சாமியாடி சின்னக் கருப்பன் எலும்புக்கூடு என்றும் தெரிய வந்துள்ளது.
4 எலும்புக் கூடுகளின் தடயவியல் அறிக்கை கிடைத்தவுடன்,இறந்தவர்களின் உறவினர்கள் எனக் கூறுபவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்பின்னரே எலும்புக் கூடுகளில் அடையாளம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்பு தோண்டிய சுடுகாட்டுப் பகுதியை மீண்டும் தோண்ட சகாயம் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 5 அடி தோண்டப்பட்ட நிலையில், மேலும் 5 அடி தோண்டும்படி சகாயம் உத்தரவிட்டதால் தோண்டும் பணி மீண்டும் நடைபெறுகிறது.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கூடுதல் தடயம் கிடைக்கக் கூடும் என்பதற்காகவே மேலும் 10 அடி தோண்டப்படுகிறது. எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் சுடுகாடு என அரசுப் பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த இடம் சுடுகாடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த இடம் சுடுகாடாக இல்லை. இதனால் தவறு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது” என்றார்.