(எதிர்வரும் அக்டோபர் 10ஆம் நாள் சென்னையில் வெளியீடு காணவிருக்கின்றது கவிப்பேரரசு வைரமுத்து முதன் முதலாக எழுதி குமுதத்தில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுதி. அந்தச் சிறுகதைகளை ஒவ்வொரு வாரமும் குமுதம் இதழில் படித்து வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
ஒருமுறை வைரமுத்து கோலாலம்பூரில் எழுத்தாளர்களிடையே ஆற்றிய உரையின் போது பின்வரும் தொனியில் கூறினார்:
“நான் அதிகமாகப் படிக்கின்ற நவீன இலக்கிய வடிவம் எது தெரியுமா தோழர்களே! நீங்கள் எல்லாம் கவிதை என நினைப்பீர்கள். இல்லை! நான் அதிகமாக படிப்பது சிறுகதைகள்தான். அவைதான் எனக்கு புதிய அனுபவத்தைத் தருகின்றன”
ஆம்! சிறுகதைகளையே அதிகமாகப் படிப்பதாகக் கூறிய வைரமுத்து – நவீனத் தமிழ் இலக்கியத்தில் பலவகைப்பட்ட வடிவங்களைக் கையாண்டு புகழ் பெற்ற வைரமுத்து – இந்த ஆண்டு வரை சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தில் கைவைக்காமல் இருந்தார் என்பது ஆச்சரியமான உண்மை.
மரபுக் கவிதை, புதுக் கவிதை, சினிமாப் பாடல்கள், கட்டுரைத்தொடர்கள், தனது சுயசரிதம், பாடல் வடிவில் பாரதியாரின் வாழ்க்கை, பாற்கடல் என்ற பெயரில் கேள்வி-பதில் தொகுதி, நாவல்கள் எனப் பல இலக்கியப் பரிமாணங்களைத் தொட்ட வைரமுத்து, இந்த ஆண்டுதான் சிறுகதை இலக்கியத்தில் கால் பதித்தார், அதுவும் அதிரடியாக!
குமுதம் இதழில் முதன் முதலாக வைரமுத்து சிறுகதைகள்
குமுதம் பத்திரிக்கையினர் ஒவ்வொரு வாரமும் தொடராக ஏதாவது எழுத முடியுமா என்று கேட்டபோது, நிகழ்ந்த உரையாடலை, சிறுகதைகளை எழுதுவதற்கு முன்னால், எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் வைரமுத்து.
“இதுவரை தொடாத இலக்கியம் – சிறுகதை எழுதுகிறேன். வாராவாரம்!” (இது வைரமுத்து)
“வாரா வாரம் முடியுமா?” – இது குமுதம் எழுப்பிய கேள்வி! (அதாவது ஒவ்வொரு வாரமும் இடைவெளி விடாமல் எழுத முடியுமா என்ற அர்த்தத்தில்)
“வாரா வாரம் முடிவதுதான் சிறுகதை.” – இது வைரமுத்து (அதாவது ஒவ்வொரு வாரமும் நிறைவு பெறுவதுதான் சிறுகதை – அடுத்த வாரமும் தொடர்ந்தால் அது நெடுங்கதையாகவோ, நாவலாகவோ ஆகி விடும் என்ற அர்த்தத்தில்)
இந்த நகைச்சுவை கலந்த உரையாடலுக்குப் பின்னணியில் ஓர் இலக்கிய வரலாற்று உண்மை புதைந்து கிடக்கின்றது.
குமுதத்தில் வெளிவந்த வைரமுத்துவின் சிறுகதைகளில் ஒன்று!
ஆம்! இதுவரை தமிழ் இலக்கிய உலகில், ஒவ்வொரு வாரமும் விடாமல் ஒரு வாரப் பத்திரிக்கையில் சிறுகதைகளை எழுதிக் குவித்தவர்கள் யாருமில்லை. இதுவரை 37 கதைகளை ஒரே மூச்சில் எழுதி முடித்து விட்டு தொடர்ந்து எழுதியும் வருகின்றார் வைரமுத்து.
இந்த இலக்கிய சாதனையை இதுவரை யாரும் செய்யவில்லை என்பதோடு இனியும் யாராவது முயற்சி எடுத்து முடிப்பார்களா – முறியடிப்பாளர்களா – என்பதும் சந்தேகம்தான்!
நூற்றுக்கணக்கில் சிறுகதைகள் எழுதிக் குவித்தவர்கள் இருக்கலாம் – ஆனால் ஒரே மூச்சில் வாராவாரம் எழுதியது – அதுவும் 37 கதைகள் வரை தொடர்ச்சியாக எழுதியது வைரமுத்து ஒருவர்தான்.
இந்த ஒரே காரணத்தால் வைரமுத்துவின் ‘குமுதம்’ சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகின் வரலாற்று சாதனையாக இடம் பிடித்து விட்டது.
வைரமுத்து சிறுகதைகளின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்
ஒரு வாசகனாக, எண்ணிலடங்கா சிறுகதைகளைப் படித்தவன் என்ற முறையிலும், ஏறத்தாழ 30 சிறுகதைகளைப் படைத்த அனுபவம் உண்டு என்ற அடிப்படையிலும், வைரமுத்துவின் சிறுகதைகள் பல கோணங்களில் என்னைக் கவர்ந்து விட்டன.
வைரமுத்துவின் இந்த சிறுகதை இலக்கியம் எத்தகைய காரணங்களால் தனித்துவமும், தனிச் சிறப்பும் பெறுகின்றது என்பதை இனி சுருக்கமாகப் பார்ப்போம்.
#1 -ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படும் எழுத்து நடை
பொதுவாக தமிழ் எழுத்தாளர்களுக்கென்று அவர்களுக்கே உரித்தான எழுத்து நடை என்று ஒன்றிருக்கும். அது அவர்களின் எழுத்துப் படிவங்களிலும் வெளிப்படும். சில சமயங்களில் மட்டும் – உதாரணமாக கிராம மொழி, நாட்டுப்புற மொழி, சென்னை மொழி என்று வரும்போது மட்டும் நடையை வேறுபடுத்திக் காட்டுவார்கள்.
அக்டோபர் 10-இல் நடைபெறும் தனது சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழாவுக்கு கமலஹாசனைச் சந்தித்து அண்மையில் வைரமுத்து அழைப்பு விடுத்தபோது….
ஆனால் வைரமுத்துவோ, ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு மொழி நடையைப் பயன்படுத்தியுள்ளார். சில கதைகள் சாதாரண நடையில் எழுதப்பட, வேறு சில, அவரது கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் நாவல்கள் பாணியில் மதுரை கிராமப்புற மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவில் படித்து விட்டுத் திரும்புவர்களைப் பற்றிய கதையில் ஆங்கிலம் கலந்த நடை வெளிப்படுகின்றது. சரித்திரப் பின்னணியோடு எழுதப்பட்ட மன்னராட்சி காலத்தைக் காட்டும் கதையில் இலக்கிய நடையிலான தமிழ் துள்ளி விளையாடுகின்றது. நேபாளத்தின் பூகம்பத் துயரில் நொறுங்கிப் போன காதலைச் சொல்லும் கதையில் முழுக்க முழுக்க கவிதை நடை.
வழக்கமாகத் தங்களுக்கென்று ஓர் எழுத்து நடை வைத்துக் கொண்டு எழுதும் எழுத்தாளர்களின் மத்தியில் வாரா வாரம் எழுத்து நடையிலேயே வித்தியாசம் காட்டியிருந்தார் வைரமுத்து.
#2 -கதைகளில் பொதிந்திருக்கும் அனுபவ உண்மைகள்
பல கதைகள் உண்மைச் சம்பவங்களின் வடிவங்களாக இருக்கின்றன என்பதை அவற்றைப் படிக்கும் போதே தெரிந்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட சம்பவங்கள்-செய்திகள் நம் கண் முன் வந்து நிழலாடுகின்றன.
உதாரணமாக, நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த பூகம்பம், காதல் வயப்பட்ட இரு உள்ளங்களின் பார்வையில் பார்க்கப்படுகின்றது.
ஒரு விமானி அறையைப் பூட்டிக் கொண்டு விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் – ஏன் அப்படி நடந்திருக்கலாம் என்ற கற்பனையாக விரிவடைகின்றது இன்னொரு கதையில்.
இவை தவிர, ஒவ்வொரு கதைக்குள்ளும் பல அரிய விஷயங்களை, கிராமப் புறத்தில் காணாமல் போய்விட்ட – ஆனால் ஆங்காங்கே இன்னும் எஞ்சியிருக்கும் பழக்கவழக்கங்களை – நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். அதில் நமக்குத் தெரியாத பல விவரங்களை அள்ளித் தெளித்திருக்கின்றார்.
பெண்பார்க்கும் இடத்தில், திருமணத்தை முடிவு செய்வதற்கு முன்னால், பெண்ணின் வயிற்றில் உள்ள மடிப்புகளைப் பார்த்து அவள் ஏற்கனவே கர்ப்பமுற்றவளா என்பதைக் கண்டுபிடிப்பார்கள் என்ற கிராமப்புற நடைமுறை ஒன்றை ஒரு கதையில் விவரிக்கின்றார் வைரமுத்து.
இது போன்ற ஏராளமான தமிழ் நாட்டுப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், கதைகளின் ஊடே நிறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் விமர்சனம் என்ற பெயரில் சில வரிகளுக்குள் விவரித்து விட முடியாது. படித்துத்தான் அனுபவிக்க வேண்டும்.
#வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்கள் – உவமைகள்
எல்லா சிறுகதைகளும் மேலோட்டமாக, அவசர கதியில் எழுதப்பட்டதாக இல்லாமல், ஆழ்ந்த சிந்தனையோடு, அழுத்தமான வார்த்தைகள், கவிஞருக்கே உரிய சொல்வன்மை, சொல்லாட்சி வெளிப்படும் வண்ணம் எழுதப்பட்டிருக்கின்றன.
அவர் கையாண்டிருக்கும் உவமைகள், நம் மனங்களில் படிக்கும்போதே பதிந்து விடுகின்றன.
உதாரணமாக, “ஒரே கோணிச் சாக்குக்குள் பாம்புடன் படுத்திருப்பது போல் அருவருப்பாக இருக்கின்றது” என்பதை படிக்கும் போதே நமது உடலும் நெளிகின்றது.
“கல் நெஞ்சக்காரி” என்ற வர்ணனைக்கு தனக்கே உரித்தான விஷமத்தனத்துடன் கிளுகிளுப்பான விளக்கம் கொடுக்கின்றார் இன்னொரு கதையில்!
ஆனால், இவற்றையெல்லாம் விவரிக்கப் புகுந்தால் அவை மட்டுமே தனி விமர்சனக் கட்டுரையாக விரியும்!
#பல்வகைப்பட்ட கதைக்களங்கள்
இறுதியாக, வைரமுத்து கதைகளில் எல்லாவற்றுக்கும் மகுடமாக என்னைக் கவர்கின்ற குறிப்பிடத்தக்க அம்சம் ஒவ்வொரு கதையிலும் கையாளப்பட்டிருக்கும் வித்தியாசமான கதைக்களங்கள்.
வைரமுத்துவின் நாவல் அனைத்துலக அளவில் சிறந்த நூலாகத் தேர்வு பெற்று மலேசியாவில் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டபோது….
மனிதர் எங்கேயிருந்து இத்தனை வேறுபட்ட சம்பவங்களைத் தனது கதைகளுக்குக் கருவாகப் பிடித்தார் என யோசிக்க வைத்திருக்கின்றார்.
கதைக்கு கரு கிடைக்கவில்லையே என அடிக்கடி தடுமாறும் புதிய எழுத்தாளர்களுக்கு தனது கதைகளின் மூலம் ஆசானாகி இருக்கின்றார் வைரமுத்து – எப்படி கதைக்கான கருவைப் பிடிப்பது என்பதை சொல்லாமல் சொல்லிக் கொடுத்திருப்பதன் மூலம்!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! இந்த வித்தியாசக் கதைக் களங்கள் எல்லாம், கதைகளை எழுதத் தொடங்கிய பின்னர் அவர் எண்ணத்தில் எழுந்தவையாக நிச்சயம் இருக்க முடியாது.
காலங் காலமாக அவர் நெஞ்சில் ஊறிக் கிடந்த சம்பவங்கள் – வாழ்க்கையில் அவர் கேட்ட, சந்தித்த அனுபவங்கள் – இவையெல்லாம் அவ்வப்போது குறிப்புகளாகவோ, கதைக் களங்களாகவோ, மனத்தின் மூலையிலோ, எழுத்து வடிவிலோ அவரோடு நீண்ட காலமாகப் பயணம் செய்து வந்திருப்பதன் வெளிப்பாடுதான் அவரது சிறுகதைகள் என்பது நன்கு புலப்படுகின்றது.
சட்டென்று நினைவுக்கு வரும் அவரது சில சிறுகதைகளின் கதைக் களங்களைப் பார்ப்போம்:-
- கோயிலுக்கு நேர்ந்து விட்ட காளை மாடு அறுப்புக்கு அனுப்பப்படுவதைக் கேள்விப்பட்டு துடிக்கும் ஊர்ப் பெரியவர் ஒருவரின் பக்தியும், அதன் கிராமப் பின்னணியும் – பகுத்தறிவு வாதம் பேசும் வைரமுத்து , ‘கோயில் மாடு’ என்ற இந்தக் கதையில் மனிதர்களின் பக்தியை அவ்வளவு நுணுக்கமாக கையாண்டிருக்கின்றார்.
- நாட்டுக் கோழிகளை சந்தைக்கு விற்கும் பெண் – தனக்கென சந்தையில் கோழி வாங்க நேரும்போது அவளுக்கு ஏற்படும் அனுபவம். இந்தக் கதையில் நாட்டுக் கோழி வளர்ப்பு, அதை சந்தையில் விற்பவர்களின் வாழ்க்கை முறைகளை படம் பிடித்துக் காட்டியிருப்பார்.
- பெண்பார்க்க வரும் இடத்தில் மணப்பெண்ணாகப் போகின்றவர் ஏற்கனவே உடலுறவில் ஈடுபட்டிருப்பாளா – கர்ப்பமுற்றிருப்பாளா என்பதை அவள் வயிற்றில் விழும் மடிப்புகளைக் கொண்டு சோதிக்கும் கிராமப் பண்பாடு.
- முதலிரவின் அனுபவங்களைச் சொல்கின்றது இன்னொரு கதை!
- குடிபோதையினால் – அதனால் நிகழும் மனப் பிறழ்வுகளால் – சீரழிந்த இரண்டு நண்பர்களின் குடும்பம் – அதனால் சிதையும் அவர்களின் வாழ்க்கை – நடப்பு டாஸ்மாக் பிரச்சனைகளின் வடிவமாகத் தெரிகின்றது இந்தக் கதை.
- ஒரு நிலத்தை விற்பதில் கூட பிராமணியம் பார்க்கும், பிராமண அனுஷ்டாங்களில் ஊறித் திளைத்த ஒருவருக்கும், அதே பிராமணியத்தை மனித நேயத்தோடு அணுகும் இன்னொரு பிராமணனையும் படம் பிடிக்கின்றது மற்றொரு கதை.
- அமெரிக்காவில் படிப்பவர்கள் பெற்றோர்களின் மரணத்திற்காக ஊர் திரும்பி வருவது – பின்னர் அவசரம் அவசரமாக வேலையின் கட்டாயத்தால் மீண்டும் அமெரிக்கா திரும்புவது
- கிராமப்புறத்தில் கூலிக்கு கொலை செய்பவன் ஒருவன் வாழ்வில், தான் செய்த கொலையால் ஏற்படும் திருப்பம்!
- பணத்தின் மீது நாட்டம் கொள்ளாத சினிமாப் பாடலாசிரியர் ஒருவரின் தன்மானத்தைச் சொல்கின்றது சினிமாப் பின்னணி கொண்ட மற்றொரு கதை.
- மனைவி மீதான காமத்துடன் ஊர் திரும்பும் இராணுவ வீரன், வீட்டில் மனைவியுடன் கூட முடியாமல் அவதியுறும் அவலத்தைச் சொல்லும் கதை
– இப்படியாக வைரமுத்துவின் வித்தியாச கதைக் களங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
குமுதத்தில் படிக்காமல் தவற விட்டவர்கள், அக்டோபர் 10ஆம் தேதி வரை காத்திருங்கள்!
ஒரே நூலாக, ஒட்டு மொத்த சிறுகதைகளையும் படித்து அனுபவிக்கலாம்!
-இரா.முத்தரசன்