கோலாலம்பூர் – அம்னோ ஒரு இனவாதக் கட்சி கிடையாது என்றும், எப்போதுமே இனவாதத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டதில்லை என்றும் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 16 அன்று நடந்த சிவப்புச் சட்டைப் பேரணி இனப்பாகுபாட்டை காட்டவில்லை மாறாக அம்னோவின் வலிமையை காட்டவே நடைபெற்றது என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
“அம்னோ நகர்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் வலுவாக இருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ள நஜிப், பேரணி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மற்ற இனத்தவர்களை அம்னோ மதிக்கிறது ஆனால் அதன் தலைவர்கள் அவமானப்படுத்தப் பட்டாலோ அல்லது மலாய்காரர்களின் கௌரவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ ஏற்றுக்கொள்ளாது என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
பேரணியின் போது எந்த ஒரு அசம்பாவிதங்களோ அல்லது மலாய்க்காரர் அல்லாத தலைவர்களின் படங்களை அவமானப்படுத்தும் சம்பவங்களோ நடைபெறவில்லை என்றும், பேரணியில் 35,000 முதல் 200,000 பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுவதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.
“எனக்கு சரியாகத் தெரியவில்லை. பல ஆயிரம் பேர் இருக்கலாம்” என்று பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு நஜிப் பதிலளித்துள்ளார்.