கோலாலம்பூர்- எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் பாஸ் கட்சி இணைய வேண்டுமென பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணையப் போவதில்லை என பாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ள போதிலும், அக்கட்சிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக வான் அசிசா கூறியுள்ளார்.
பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில், தேசிய முன்னணி வீழ்த்த வேண்டுமெனில், புதிய கூட்டணியில் பாஸ் கட்சியும் இடம்பெற வேண்டியது அவசியம் என்றும், அப்போதுதான் ஆட்சியமைப்பதற்கான எண்ணிக்கை ரீதியில் அமையும் கணக்குகள் சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்ட பார்ட்டி அமானா மீது நம்பிக்கை உள்ளதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “பொதுவான ஒரு தளத்தில் நமக்கு அனைவரின் ஆதரவும் தேவை. நாம் அனைவரும் ஒன்றாக இருந்தோம் எனில், பெரும்பான்மையே வெற்றி பெறும்,” என்றார்.
புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பான வட்டமேசை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கடந்த செவ்வாய்க்கிழமை பாஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வான் அசிசா தெரிவித்தார்.
இந்நிலையில் அமானா மற்றும் ஜசெக ஆகிய கட்சிகளுடன் தங்களால் இணைந்து செயல்பட இயலாது என பாஸ் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.