சென்னை – வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மூலம் 223 கோடி மதிப்பிலான கருப்புப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்குத் தொடர்புள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளேடுகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் எஸ். குருமூர்த்தி எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது.
மேலும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்குத் தொடர்பிருக்கிறதா? இந்த விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் ஹிகித்சா ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் மூலம் ஆம்புலன்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்கு அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தில் தமக்கு எந்த ஒரு பங்கும் இல்லை எனக் கார்த்தி சிதம்பரம் கூறி வருகிறார்.
வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தின் உரிமையாளர்களாகிய டாக்டர் அருண், அவரது மனைவி மீரா இருவரும் தங்களது 3 லட்சம் பங்குகளைத் துவாரகநாதன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
அதில் அவர் 1.5 லட்சம் பங்குகளை ‘அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட்’ நிறுவனத்துக்கு எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் விற்பனை செய்திருக்கிறார்.
இந்த அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்தில் 3-இல் 2 பங்கு பங்குகள் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ‘அஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ என்ற நிறுவனத்திற்கு உரியவை.
அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் 1.5 லட்சம் பங்குகளைத் துவாரகநாதன் விற்பனை செய்த விவகாரம்தான் இப்போது பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
2008-ஆம் ஆண்டு அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு 1.5 லட்சம் பங்குகள் எப்படி விற்பனை செய்யப்பட்டன?
இந்தப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்திற்குப் பங்குகள் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.