கொழும்பு – இலங்கையில் இராஜபக்சேவின் ஆட்சி காலத்தில், ஈழத் தமிழருக்கு எதிராக நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் என ஆரம்பம் முதலே இந்தியாவை விட அமெரிக்கா அதிக அக்கறை காட்டி வந்தது. இந்நிலையில் தற்போது, ஜெனிவாவில் நடந்து வரும் ஐநா சபை மனித உரிமைகள் ஆணையத்தின் 30-ஆவது கூட்டத்தில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை ஒட்டுமொத்தமாக தலைகீழாக மாற்றிக் கொண்டுள்ளது. இக்கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி அமெரிக்கா, இலங்கைக்கு ஆதரவாக தனது தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளது.
அதாவது, ஐநா-வே இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளதை உறுதி செய்துள்ள நிலையில், அமெரிக்கா, இலங்கையை ஆதரித்து, “இலங்கை இறுதிப்போர் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதும்” என்ற தீர்மானத்தை கொண்டு வர உள்ளது. கண்டிப்பாக அமெரிக்காவின் தீர்மானம் தான் ஐநாவில் எதிரொலிக்கும். இந்நிலையில், அமெரிக்காவின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் குறித்து ஆராய்கையில், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அமெரிக்காவின் திரைமறைவு அரசியல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆசியாவில் சீனாவைத் தவிர மற்ற நாடுகளை தனது ‘நட்பு’ வட்டத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணமாக இருந்துள்ளது. அதற்கு பல்வேறு சுயநல ஆதாயங்களும் இருந்துள்ளன. இதில் சீனாவை எதிர்க்கும் இந்தியா, அமெரிக்காவுடன் நட்பை தலையாயக் கடமையாக கடைப்பிடித்து வரும் நிலையில், சீனாவை அப்போது ஆதரித்த ஒரே நாடு இலங்கை மட்டும் தான்.
அப்போதைய இலங்கை அதிபர் இராஜபக்சே, இந்தியாவை கட்டுக்குள் வைப்பதற்காக சீனாவை தொடர்ந்து ஆதரித்து வந்தார். இதனால், சற்றே எரிச்சல் அடைந்த அமெரிக்கா, இராஜபக்சேவிற்கு நெருக்கடி கொடுக்கவே ஐநா தீர்மானத்தை அப்போது கொண்டு வந்துள்ளது.
இலங்கையில் ராஜபக்சே தோற்று புதிய அதிபராக சிறிசேனா பதவி ஏற்றவுடன், அவரின் வெளியுறவுக் கொள்கைகள் முற்றிலும் மாறின. அவர் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு சாதகமான கொள்கைகளை கடைபிடிப்பவராக உள்ளதால், அவரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக அமெரிக்கா தற்போது உள்நாட்டு விசாரணையே போதும் என்ற முடிவிற்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அரசியல் சூதை விவரம் அறிந்தவர்கள் எதிர்பார்த்து இருந்தாலும், எப்படியும் அமெரிக்கா அனைத்துலக விசாரணையை கொண்டு வந்துவிடும் என நம்பி இருந்தவர்கள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். அமெரிக்கா, தனது அரசியல் விளையாட்டுகளை காண்பிக்க, நாங்கள் தான் கிடைத்தோமா? என்பதே அப்பாவி ஈழத் தமிழர்களின் மனக் குமுறலாக உள்ளது.
-சுரேஷ்