Home Featured நாடு இன்று முதல் மீண்டும் வெளிவருகின்றது ‘எட்ஜ்’ பத்திரிக்கை!

இன்று முதல் மீண்டும் வெளிவருகின்றது ‘எட்ஜ்’ பத்திரிக்கை!

841
0
SHARE
Ad

The Edgeகோலாலம்பூர் – உள்துறை அமைச்சுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் நேற்று வெற்றி வாகை சூடிய எட்ஜ் பைனான்சியல் டெய்லி ஆங்கிலப் பத்திரிக்கை இன்று முதல் மீண்டும் வெளிவருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்ஜ் வீக்லி வாரப் பத்திரிக்கை இந்த வாரம் சனிக்கிழமை முதல் வழக்கம்போல் வாரந்தோறும் வெளிவரும்.

இதன் மூலம் 1எம்டிபி விவகாரங்கள் குறித்த தகவல்களை பரபரப்புடன் வழங்கி வந்த அந்த இரு பத்திரிக்கைகள், மேலும் பல சூடான தகவல்களை புதிய கோணங்களில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

நீதிபதியின் காரணங்கள் என்ன?

நேற்று நடைபெற்ற வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்மாபி முகமட் உள்துறை அமைச்சின் முடிவு மீதான சீராய்வு மனுவுக்கு (judicial review) அனுமதி அளித்திருப்பதன் மூலம் மலேசிய நீதிமன்றங்களில் சுதந்திரத்தை நிலைநாட்டியிருப்பதோடு, சட்டப் போராட்டங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நீதியும், நியாயமும் கிடைக்க இன்னும் நாட்டில் வாய்ப்பிருக்கின்றது என்பதையும் நிரூபித்துள்ளார்.

KL High Courtஅச்சக மற்றும் பதிப்பாளர்கள் (1984) சட்டத்தின் 7 (1) பிரிவை உள்துறை அமைச்சு மீறியுள்ளது என தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

நியாயமான நடைமுறைகளை உள்துறை அமைச்சு பின்பற்றவில்லை என்றும், பத்திரிக்கைக்கு இடைக்காலத் தடை விதிப்பதற்கான காரணங்களை உள்துறை அமைச்சு அவர்களுக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் கூறியிருக்கின்றார்.

2009 முதல் 1எம்டிபி விவகாரங்கள் குறித்து இதுவரை சுமார் 300 கட்டுரைகளை அந்தப் பத்திரிக்கை பிரசுரித்து வந்திருப்பதால், எந்தக் கட்டுரை குறித்து காரணம் காட்டும் கடிதம் வழங்கப்பட்டது என்ற விவரத்தை முறையாக அதற்குத் தெரிவிக்காமல், உள்துறை அமைச்சு பொதுவாக குற்றம் சாட்டியிருந்த காரணத்தால், அந்தப் பத்திரிக்கை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டது என்றும் நீதிபதி தனது தீர்ப்புக்குக் காரணமாக விளக்கியிருக்கின்றார்.

பத்திரிக்கையின் வருமானம், அதில் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது, போன்ற முக்கியமான விவகாரங்கள் அடங்கியிருப்பதால், ஒரு பத்திரிக்கையை இரத்து செய்வதற்கு முன்னால், அதற்கான முறையான காரணங்களை, விளக்க வேண்டும் என்பதோடு, எந்தக் கட்டுரை முறையற்றது, எந்தக் கட்டுரை சட்ட விதிகளுக்கு எதிரானது என்பது போன்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது வரலாற்றுபூர்வ தீர்ப்பில் தெரிவித்திருக்கின்றார்.

பத்திரிக்கைத் தடைக்கு எதிரான முதல் வரலாற்று வெற்றி

இதுவரை, பல முறை பத்திரிக்கைகள் உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதை எதிர்த்துப் போராடி நீதிமன்றத்தில் வெற்றி பெறுவது என்பது இதுதான் முதல் முறை என்ற காரணத்தால், எட்ஜ் விவகாரம் மலேசிய நீதிமன்ற சரித்திரத்தில் தனியிடம் பெறுகின்றது.

தீர்ப்பு தொடர்பாக வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில், எட்ஜ் பத்திரிக்கைகளின் இடைநீக்க முடிவை இரத்து செய்த நீதிபதி அஸ்மாபியின் முடிவை அந்தப் பத்திரிக்கை நிர்வாகம் பாராட்டியது. “இதன்மூலம் இந்த இடைக்காலத் தடையுத்தரவு நியாயமில்லாத, பொருத்தமான காரணங்கள் இல்லாத ஒன்று என்ற எங்களின் நிலைப்பாடு வெற்றி பெற்றுள்ளது” என்றும் அந்தப் பத்திரிக்கை கூறியுள்ளது.

-இரா.முத்தரசன்