கோலாலம்பூர் – மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை ஏழு முறை வென்றவரும், ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அர்னால்டு சுவார்ஸ்னெகர் அடுத்த மாதம் கோலாலம்பூருக்கு வருகை புரிந்து, உருமாற்றம் (Transformation) குறித்து உரையாற்றவுள்ளார்.
மேலே காணும் இரண்டு வரிகளை மட்டும் படித்துவிட்டு, “என்னது! அர்னால்டே நேரடியாக வந்து உருமாற்றம் (Transformation) குறித்து உரையாற்றுகிறாரா?” என்று உற்சாகத்தில் இப்போதே ஜிம்மில் 10 கிலோ கூடுதலாக எடையைப் போட்டு பயிற்சியைத் தொடங்கிவிடாதீர்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களே! இது நீங்கள் நினைக்கும் உடல் உருமாற்றம் (Body Transformation) அல்ல.
பலதுறைகள் நிபுணரான அர்னால்டு, கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர் அல்லவா? அந்த வகையில், எதிர்வரும் அக்டோபர் 21 -23 வரையிலான தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் அனைத்துல உருமாற்று கருத்தரங்கில் (Global Transformation Forum), முன்னாள் ஒலிம்பிக் சேம்பியன் கார்ல் லெவிஸ் உட்பட முக்கியப் பிரமுகர்களுடன் அர்னால்டு உரையாற்றவுள்ளார்.
ஒரு உடற்பயிற்சியாளராக, சினிமா நட்சத்திரமாக, தொழிலதிபராக, ஆளுநராக மற்றும் கல்வியாளராக பலதுறைகளில் தான் சிறந்து விளங்கக் காரணமான தலைமைத்துவ உருமாற்றம் குறித்த முக்கியத் தகவல்களை இந்தக் கருத்தரங்கில் அர்னால்டு பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், கலிபோர்னியா ஆளுநராக தான் பதவி வகித்த காலத்தில், அம்மாகாணத்தில், எரிசக்தியைப் புதுபிப்பதிலும், போக்குவரத்து மற்றும் மறுமுதலீட்டிலும் உருமாற்றம் கொண்டு வர அதன் கொள்கைகளில் தேவையான சீரமைப்பு செய்தது போன்ற விசயங்களையும் அர்னால்டு பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் அக்டோபர் 22-ம் தேதி, மதியம் 2 மணியளவில், கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில், ‘செயல்பாடுகளில் ஒழுக்கம் – Discipline Of Action’ என்ற தலைப்பில் அர்னால்டு உரையாற்றவுள்ளார்.
இந்தக் கருத்தரங்கில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் தோங், முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஹெலென் க்ளார்க், முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
அதேவேளையில், கசானா நேஷனல் பெர்காட் துணைத்தலைவர் நோர் முகமட் யாக்கோப் மற்றும் ஏர்ஆசியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேல் விவரங்களுக்கு கீழ்காணும் அகப்பக்கத்தைப் பார்வையிடவும்:
http://globaltransformation.com/
தொகுப்பு: செல்லியல்