மாஸ்கோ – திரையரங்கில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ஹாலிவுட் படமான ‘தி மார்ஷியன்’ படத்தை, முன்கூட்டியே அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபடி விண்வெளி வீரர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
‘தி மார்ஷியன்’ ஓர் ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.இது செவ்வாய்க் கிரகத்தைக் கதைக் களமாகக் கொண்டது.
செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் குழு அங்கு வீசும் பிரம்மாண்டமான புயலின் காரணமாகத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பூமிக்குத் திரும்புகின்றது.
ஆனால், அந்தக் குழுவில் இடம்பெற்ற நாயகன் மட்டும் தவறுதலாகச் செவ்வாய்க் கிரகத்தில் மாட்டிக் கொள்கிறார். அவர் அங்கிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிட்லி ஸ்காட் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாட் டாமன் மற்றும் ஜெசிகா செஸ்டன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மிகப் பிரமாண்டமான முறையில் தயாராகியுள்ள இப்படத்தைக் காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்களையெல்லாம் முந்திக் கொண்டு அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் இப்படத்தை முன்கூட்டியே கண்டுகளித்துள்ளனர்.
இந்தப் படம் விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படம் என்பதால், விண்வெளியில் இருக்கும் அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்குச் சிறப்பாகப் போட்டுக் காண்பித்துள்ளது படக்குழு.
இந்தப் படத்தைப் பார்த்த விண்வெளி வீரர்கள், “தி மார்ஷியன் படம் எங்கள் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.