கோலாலம்பூர் – நாட்டில் ஏற்பட்டுள்ள ஊழல் விவகாரங்கள், குழப்பங்களை மூடிமறைக்கும் அரசியல் நோக்கங்களுக்காக சில தரப்பினர் தொடர்ந்து இனவாதப் பிரச்சனைகளைக் கிளப்பி வருவார்களேயானால், அது சமத்துவத்தை வலியுறுத்தும் கொள்கைகளைக் கொண்ட எதிர்கட்சிகளுக்கு சாதகமாகவே அமைந்து, அவர்களின் கை ஓங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
அந்த வகையில், பெட்டாலிங் வீதி வியாபாரிகளைக் குறி வைத்து சிவப்புச் சட்டைப் பேரணியின் ஒருங்கிணைப்பாளர் ஜமால் யூனுஸ் வெளியிட்ட அச்சுறுத்தல் அறிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு மலேசியாவுக்கான சீனத் தூதர் முதல் எதிர்கட்சித் தலைவர்கள் வரை முக்கியத் தலைவர்களின் ஆதரவை ஈட்டித் தந்துள்ளது.
பெட்டாலிங் வீதியை இன்று பார்வையிட்ட எதிர்கட்சித் தலைவர்கள், அங்குள்ள வியாபாரிகளுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்ததோடு, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர்.
ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தலைமையில், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் உட்பட எதிர்கட்சிகளைச் சேர்ந்த 15 தலைவர்கள் இன்று காலை பெட்டாலிங் வீதியை வலம் வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நூருல் இசா, தாங்கள் இங்கு வந்தது வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமல்லாது, இந்த இடம் அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது என்பதை வலியுறுத்தவும் தான் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட சில பிரிவுகளுக்குப் பின்னர், உடைந்திருந்த பக்காத்தான் கூட்டணி, ‘பக்காத்தான் ஹராப்பான்’ என்ற புதிய பெயரில் மீண்டும் எதிர்கட்சிக் கூட்டணியாக உருவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.