சவுதி அரேபியா – புனித மெக்காவில் கடந்த 11-ஆம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் 110 பேருக்கு மேற்பட்டோரும், கடந்த வியாழனன்று மெக்காவிற்கு அருகிலுள்ள மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 700 பேருக்கு மேற்பட்டோரும் பலியானார்கள்; 800 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஹஜ் பயணத்தின் போது செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த சவுதி அரேபிய மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புனிதப் பயணத்திற்கு வரும் மக்களை வழிநடத்தும் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்துயரச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய, சவுதி அரசு புதிய விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் பயணத்தை வழிநடத்தும் குழுவினர் வகுத்து அளித்திருந்த கால அட்டவணையைப் புனிதப் பயணிகள் பின்பற்றாததே கூட்ட நெரிசலுக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளதாகச் சவுதியின் சுகாதாரத்துறை அமைச்சர் காலித் அல் பாலிஹ் தெரிவித்துள்ளார்.