ஜெனிவா – உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள விவகாரம் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள வரைவு தீர்மானம்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக நீதிபதிகள் பங்கேற்புடன் உள்நாட்டு விசாரணை நடத்தும் வகையில், இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 30-ம் தேதி ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30–வது கூட்டத்தில் திருத்தப்பட்ட வரைவு தீர்மானத்தை அமெரிக்கா இன்று தாக்கல் செய்தது. அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைத்த அனைத்துலக நீதிமன்றம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர்க்குற்ற புகார்களை உள்நாட்டு விசாரணையாக, இலங்கையின் நீதித்துறை அமைப்பே விசாரிக்கலாம் என்றும், காமன்வெல்த் நாடுகள் மற்றும் அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் மற்றும் விசாரணை அதிகாரிகளும் இந்த விசாரணை அமைப்பில் இடம் பெறலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என இலங்கைத் தமிழர் அமைப்புகளும், உலகம் எங்கும் உள்ள தமிழ் இயக்கங்களும், தமிழ் நாட்டு அரசாங்கமும் கொடுத்து வந்த நெருக்குதல்களின் காரணமாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
அமெரிக்காவின் ஆதரவோடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த வரைவு தீர்மானம் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.