Home அரசியல் “பக்காத்தான் நேரடியாக பதில் சொல்லட்டும். குலசேகரன் அறிக்கைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்” – ஹிண்ட்ராப்...

“பக்காத்தான் நேரடியாக பதில் சொல்லட்டும். குலசேகரன் அறிக்கைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்” – ஹிண்ட்ராப் பதில் அறிக்கை

623
0
SHARE
Ad

Ramesh-Hindraf-Secமார்ச் 12 – கடந்த மார்ச் 10ஆம் தேதி, மலேசியாகினி இணையத் தளத்தில் ஜ.செ.க தலைவர்களில் ஒருவரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் எழுதியுள்ள கடித வடிவிலான அறிக்கைக்கு ஹிண்ட்ராப் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பி.ரமேஷ் (படம்) பதில் தந்துள்ளார்.

“எங்களின் கோரிக்கைகளை ஏற்காமல் ஒதுக்கிக் கொள்ளும் வகையில் மறைமுகமாக பக்காத்தான் கூட்டணி குலசேகரன் ரூபத்தில் இந்த அறிக்கையின் மூலம் தங்களின் பதிலை வழங்கியிருக்கின்றார்களோ?” என்றும் ரமேஷ் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

“குலசேகரன் அறிக்கையைப் பார்க்கும்போது அவர் பக்காத்தானின் பிரதிநிதி போன்ற தோற்றத்துடன் அந்த அறிக்கையை எழுதியிருப்பதுபோல் தெரிகின்றது. அவர் சார்ந்துள்ள கட்சியின் மற்ற உயர்நிலை தலைவர்களின் அனுமதி இல்லாமல் அத்தகைய அறிக்கையை குலசேகரன் வெளியிட்டிருக்க முடியாது என நாங்கள் நம்புகின்றோம்” என்றும் ரமேஷ் தனது பதிலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

“பக்காத்தான் நேரடியாக முன்வந்து பதில் சொல்ல வேண்டும்”

பி.ரமேஷ் ஹிண்ட்ராப் சார்பாக வெளியிட்டுள்ள பதிலில் தொடர்ந்து கூறியிருப்பதாவது;-

“இந்த விவகாரத்தில் பக்காத்தான் தலைமைத்துவம் தெளிவான பதிலோடு வெளியில் வரவேண்டும் என்று ஹிண்ட்ராப் சார்பாக சவால் விடுக்கின்றோம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் எங்களுக்கு ஹிண்ட்ராப்பின் ஆதரவு தேவையில்லை என்று அவர்கள் சொல்ல வேண்டும். நாங்கள் சொல்வதில் அடிப்படை இல்லையென்றால் பக்காத்தான் தலைமைத்துவமும், டத்தோஸ்ரீ அன்வார், தோக் குரு நிக் அசிஸ், லிம் கிட் சியாங் ஆகியோரும் முன்வந்து குலசேகரன் கூறியுள்ள கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்”

“அப்படி மறுப்பறிக்கை ஏதும் வெளியிடப்படாத பட்சத்தில் பக்காத்தான் கூட்டணிதான் தங்களின் கருத்துக்களை தங்களின் பிரதிநிதியான குலசேகரன் விடுத்திருக்கும் அறிக்கை மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கின்றது என்ற முடிவுக்கு நாங்கள் வருவோம்”

“பக்காத்தான் கூட்டணியில் தனது சொந்த பதவியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பக்காத்தான்-ஹிண்ட்ராப் இடையிலான உறவும் கூட்டணியும் உருவாவதை குலசேகரன் விரும்பவில்லை என்றும் அதனால்தான் இந்த மாதிரியான அறிக்கையை விடுத்திருக்கின்றார் என்றும் எங்களில் சிலர் ஆரூடம் தெரிவித்துள்ளனர். இதுவரை பக்காத்தான்-ஹிண்ட்ராப் நல்லுறவு உருவாவதற்கு குலசேகரன் உருப்படியாக எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை.”

“ஹிண்ட்ராப் திட்ட வரைவு குறித்த விவாதங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதுடன், எங்களின் திட்டத்திற்கு மாற்றாகவோ, அல்லது அதனை மெருகூட்டும் விதமாகவோ, வேறு திட்டங்களை அவர் முன்மொழியவுமில்லை, எங்களிடையே நல்லுறவு வளர்வதற்கும் எதுவும் இதுவரை அவர் செய்யவில்லை.”

“இருப்பினும் உடனுக்குடன் விரிவான முறையில் ஹிண்ட்ராப்பை அவர் கடுமையாக விமர்சித்துள்ளதோடு, ஹிண்ட்ராப்பைப் பற்றி மட்டம் தட்டியும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார், எனவே அவரது உண்மையான நோக்கம் – திட்டம் என்ன என்றும் எங்களில் ஒரு சாரார் கேள்வி எழுப்பியுள்ளனர்”

“பக்காத்தான் தலைமைத்துவத்துடனான சந்திப்புக்களில் குலசேகரன் கலந்து கொள்ளவில்லை”

“பக்காத்தான் தலைமைத்துவத்துடன் நடத்தப்பட்ட எல்லா சந்திப்புக் கூட்டங்களிலும் எங்களின் நிலைப்பாட்டை தெளிவாக ஏற்கனவே தெரிவித்து விட்டோம். எங்களின் தேர்தல் பணியாளர்களைக் கொண்டு பக்காத்தானுக்காக நாடு முழுவதிலும் ஆதரவு திரட்டத் தயாராக இருக்கின்றோம், ஆனால் எங்களின் ஐந்தாண்டு திட்ட வரைவினை அவர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளவேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரின் முயற்சியும் தேவை”

“தேர்தலிப் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஹிண்ட்ராப் இதுவரை எந்தவித விரிவான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை. காரணம் எங்களின் திட்டவரைவினை முதலில் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதன் பின்னர்தான் இறுதியான தொகுதி உடன்பாடு குறித்த கலந்துரையாடலில் நாங்கள் கலந்து கொள்வோம். இந்த வரிசைதான் நாங்கள் தருகின்ற முக்கியத்துவம். இது சம்பந்தப்பட்ட எந்த கூட்டத்திலும் குலசேகரன் இதுவரை கலந்து கொண்டதில்லை என்பதால் அவருக்கு இதைப்பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.”
“குலசேகரனின்அறிக்கையை வைத்துப் பார்க்கும் போது ஹிண்ட்ராப்புடனான தங்களின் உறவைப் பற்றி வெளியுலகத்திற்கு சொல்ல பக்காத்தான் தலைமைத்துவம், குலசேகரனை தங்களின் ஒலிபெருக்கியாக உபயோகித்திருக்கின்றார்களோ?”

“எது எப்படியாயினும் ஹிண்ட்ராப் மீதிலான தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை பக்காத்தான் தலைமைத்துவம் நேரடியாக வெளியில் வந்து வெட்ட வெளிச்சமாக பதில் கூற வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம்.”

-இவ்வாறு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தின் பொதுச் செயலாளர் பி.ரமேஷ் குலசேகரனுக்கு பதில் கூறியிருக்கின்றார்.