சென்னை – தெனாலிராமன் படத்தையடுத்து, அந்தப் படத்தின் இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த நகைச்சுவைப் படம் எலி.
வடிவேலுவை வைத்து நகைச்சுவை என்கிற பெயரில் எடுத்த இப்படம் படுதோல்வியடைந்தது. இதனால் தயாரிப்பாளருக்குப் பல கோடி நட்டம்.
படுதோல்வியடைந்த பல மாதம் கழித்து இப்படத்தில் தயாரிப்பாளர் சதீஷ்குமார், வடிவேலு தன்னை மோசடி செய்துவிட்டதாகக் கூறி சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ரூ 12 கோடிக்கு இந்தப் படம் எடுக்கப்பட்டதாகவும், அதில் வடிவேலுவுக்கு மட்டுமே ரூ 8 கோடி சம்பளம் கொடுத்ததாகவும், படம் வெளியாவதற்கு முன்பே ஒரு தொலைக்காட்சியில் ரூ 10 கோடி வரை தரத் தயாராக இருந்தும் இப்படத்தை வாங்க விடாமல் வடிவேலு தடுத்துவிட்டதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அவரது தடையால் வேறு தொலைக்காட்சிகள் எதுவும் இந்தப் படத்தை வாங்காமல் விட்டுவிட்டன. ஆகையால் எனக்கு மிகப் பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டுவிட்டது.
இவை அனைத்திற்குமே வடிவேலுதான் காரணம்.அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட ஆணையர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.