Home Featured நாடு “யாரையும் வேட்பாளராக நியமனம் செய்யாதீர்கள்” – தொகுதிகளுக்கு சுப்ரா வேண்டுகோள்!

“யாரையும் வேட்பாளராக நியமனம் செய்யாதீர்கள்” – தொகுதிகளுக்கு சுப்ரா வேண்டுகோள்!

489
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – அண்மைய சில நாட்களாக மஇகா தொகுதித் தலைவர்கள், ஒரு சில தொகுதிக் கூட்டங்களில் குறிப்பிட்ட சிலரை தேசிய நிலையிலான பதவிகளுக்கு நியமனம் செய்து அறிவிப்பு செய்து வருகின்றார்கள்.

இந்நிலையில் அவ்வாறு செய்வது மஇகா தேர்தல் நடைமுறைகளுக்கு முரணானது என்றும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் தொகுதித் தலைவர்களுக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

“ஒரு சில கட்சிகளில் உள்ளதுபோல் நமது மஇகாவில் தொகுதிகள் மூலமாகவோ, மாநிலங்கள் மூலமாகவோ ஒரு வேட்பாளரை ஒரு குறிப்பிட்ட பதவிக்கு முன்மொழியும் நடைமுறை இல்லை. நமது கட்சியைப் பொறுத்தவரை பேராளர்கள்தான் ஒரு வேட்பாளரை முன்மொழிவார்கள். பின்னர் தேர்தல் நடைபெறும்போது அவர்களுக்காக வாக்களிப்பார்கள். இந்நிலையில் தொகுதிகளுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் பிளவுகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வண்ணம், ஒரு  குறிப்பிட்ட வேட்பாளரை ஒரு குறிப்பிட்ட பதவிக்கு நியமனம் செய்கின்றோம் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு விடுக்கும் போக்கை மாநில, தொகுதித் தலைவர்களும் பொறுப்பாளர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்” என டாக்டர் சுப்ரா இன்று வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தத் தேர்தலில் நிறைய பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் கூறியுள்ள டாக்டர் சுப்ரா, “அனைத்து வேட்பாளர்களுக்கும், பேராளர்களின் ஆதரவும் ஆசியும் தேவைப்படும். எனவே, வேட்புமனுத் தாக்கல் வரை காத்திருங்கள். பேராளர்கள் தங்களின் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக நியமனம் செய்த பின்னர், வேட்பாளர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று, பேராளர்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்யலாம். வாக்கு சேகரிக்கலாம். இறுதியில் வேட்பாளர்களே யார் வெற்றி பெறுவது என்பது குறித்து முடிவெடுப்பார்கள். எனவே, எனது ஆலோசனையும், அறிவுரையும் என்னவென்றால், தற்போதைக்கு அனைவரும் அமைதியாக பொறுத்திருங்கள். பேராளர்களே இறுதி முடிவு செய்யட்டும் என்பதுதான்” என்றும் தனது அறிக்கையில் சுப்ரா மஇகாவினரை கேட்டுக் கொண்டுள்ளார்.