சென்னை – திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்றும், திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட உள்ளது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓரடியில் உலக மக்களுக்கேற்ற எளிய அறநெறிக் கருத்துக்களைக் கொண்ட ஆத்திசூடியையும் சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘அம்மா இலக்கிய விருது’ என்ற புதிய விருது சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அம்மா இலக்கிய விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும், சான்றிதழும் வழங்கப்படும்.