புது டெல்லி – இந்தியாவின் பண்பாட்டு பன்முகத் தன்மையை கட்டிக் காக்க மோடி தவறிவிட்டார். இந்து மதம் குறித்து யார் கேள்வி கேட்டாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். இவை அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி, மௌனியாக வேடிக்கை பார்க்கிறார் என்று கூறி தனக்கு அளிக்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருதுகளுள் ஒன்றான சாகித்ய அகாடமி விருதை பிரபல எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் உறவினருமான நயன்தாரா சேகல் நேற்று திருப்பிக் கொடுத்துள்ளார்.
நயன்தாரா சேகலின் தார்மீக ரீதியிலான இந்த எதிர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில், அவர் ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “அவர்கள் வகுக்கும் சித்தாந்தங்களில் இருந்து வேறுபடுபவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது அச்சுறுத்தப்படுகின்றனர். நாம் தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுத்தாளர்களின் படுகொலைகளை பார்த்து வருகிறோம்.”
“சமீபத்தில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாகக் கூறி தாத்ரியில் ஒருவர் கொல்லப்பட்டார். மதத்தை காரணம் காட்டி வன்முறை பெருகி வரும் இந்த சமயத்திலும் மோடி அமைதியை கடைபிடிக்கிறார். வெளிநாடுகளில் வீராவேசமாக பேசும் மோடிக்கு, இந்த தருணத்தில் என்ன பேச வேண்டும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.