கோலாலம்பூர் – ஆப்பிள், கூகுள், ஏசர் போன்ற நிறுவனங்களின் தற்போதய கவனம் முழுவதும் மைக்ரோசாப்ட் பக்கம் திரும்பி உள்ளது. அதற்கு காரணம் முதல் முறையாக அந்நிறுவனம் அதிக திறன் வாய்ந்த மடிக்கணினி (Laptop) ஒன்றை வெளியிட்டுள்ளது தான்.
மடிக்கணினி என்பது பொதுவான ஒன்று தான் என்று நினைக்கத் தோன்றலாம். ஆனால், பெரும்பான்மையான கணினிகள் மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில் இயங்கும் போது அந்நிறுவனமே தங்கள் இயங்குதளத்திற்கு பொருத்தமான மடிக்கணினி ஒன்றை வெளியிட்டால் அது கூடுதல் சிறப்பு பெறுவது இயற்கையான ஒன்று தானே.
சர்ஃபேஸ் புக் (Surface) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினியின் முதல் சிறப்பே, இது ஒரு ‘டூ இன் ஒன்’ (Two in One) கருவியாகும். இதன் விசைப்பலகையை (கீ போர்ட்) கழற்றி விட்டு டேப்லெட் (Tablet) ஆகவும் பயன்படுத்தலாம்.
இங்கு இரண்டாவதாக குறிப்பிட வேண்டியது கணினியின் திறனிற்கு காரணமான ப்ராசஸரைத் (Processor) தான். இண்டெலின் i5 அல்லது i7 ப்ராசஸர் கொண்ட கருவியை, பயனர்கள் தங்கள் நிதி நிலையைப் பொறுத்து வாங்கிக் கொள்ளலாம். கிராபிக்ஸ் பயன்பாடுகளை விண்டோஸ் இயங்குதளங்கள் மிக எளிதாக கையாளும் போது, மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் மடிக்கணினியில் அத்தகைய பயன்பாடுகள் பற்றி கூடுதலாக சொல்லத் தேவையில்லை.
13.5 அங்குல திரை கொண்ட இந்த மடிக்கணினி 700 கிராம் எடை கொண்டதாக இருப்பதால், கையாள்வது எளிமையாக இருக்கும். வெளிப்புறத் தோற்றமும் காண்போரை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
இங்கு குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் மின்கலன் (Battery) தான். பல மடிக்கணினிகளுக்கு மின்கலன், காலனாக உள்ள நிலையில், மைக்ரோசாப்ட் இதில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. சாதாரணமாக 12 மணி நேரம் வரை தாக்கு பிடிக்கக் கூடிய தரம்வாய்ந்த மின்கலன் பொருத்தப்பட்டிருப்பதாக மைக்ரோசாப்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.
இம்மாதம் 26-ம் தேதி முதல் இந்த மடிக்கணினி விற்பனைக்கு வருகிறது. இதன் அடிப்படை மாதிரியின் விலை வெறும் 1,499 டாலர்கள் (6462.19 ரிங்கிட்) தானாம்.